ADDED : பிப் 17, 2025 05:58 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பாலசுப்ரமணியன் நகர் முதல் விளாச்சேரி வரையிலும், விளாச்சேரி முதல் வடிவேல்கரை நான்கு வழிச்சாலை வரையுள்ள தார்ச்சாலை 17 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி கிடப்பதால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயை ஒட்டி ரோடு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருநகரில் இருந்து விளாச்சேரி, நாகமலை புதுக்கோட்டை, பல்கலை, தட்டானுார், வடிவேல்கரை, அச்சம்பத்து, துவரிமான், சோழவந்தான் செல்வோர் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்த ரோடு 17 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தேவி நகர் முதல் பாலசுப்ரமணியம் நகர் மாநகராட்சி எல்லை வரை தார்ச்சாலை உள்ளது. விளாச்சேரி எல்லையில் இருந்து நான்கு வழிச் சாலை வரையான ரோட்டில் தார் மறைந்து கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் டூவீலரின் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

