/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை; தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல்
/
ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை; தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை; தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை; தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2025 09:31 AM
மதுரை: தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி தேசிய அளவில் தொடக்க கல்வியில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 2011ல் இத்தேர்வு நடைமுறைக்கு வந்தது.
பதவி உயர்வுக்கும் 'டெட்' கட்டாயமா என்பது உட்பட சில வழக்குகள் தொடர்பான விசாரணையில், அனைத்து ஆசிரியர்களுக்கும் 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என்றும், ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்தும், விலக்கு பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரினால் அவர்களும் அதற்கு 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் தமிழகத்தில் 2011க்கு முன் பணியில் சேர்ந்த 1.70 லட்சம் ஆசிரியர்கள் 'டெட்' தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் தமிழக அரசு வரும் ஜன., 24, 25 முதற்கட்டமாகவும், ஜூலை, டிசம்பரில் அடுத்தடுத்து சிறப்பு 'டெட்' தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை நழுவவிட்டால் ஆசிரியர் பணி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பணியில் உள்ள ஆசிரியர்கள் தற்போது சிறப்பு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
அதேநேரம் அதற்கான பாடத்திட்டங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படாததால் குழப்பத்தில் உள்ளனர்.
அதேநேரம் பிற மாநிலங்களில் உள்ளது போல் 20 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தை மனதில்கொண்டு அரசின் கொள்கை முடிவாக தேர்ச்சி மதிப்பெண் 82 என்பதை 50 ஆக குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில தலைவர் ராபர்ட் கூறிய தாவது:
எந்த துறையிலும் நடக்காத வினோதம் இத்துறையில் நடக்கிறது. 30 ஆண்டுகள் ஆசிரியராக அர்ப்பணிப்புடன் பணியாற்றி பலரை டாக்டர்கள், பொறியாளர்களாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு என்பது மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
இது இளைஞருக்கும், முதியவருக்கும் நடத்தும் ஓட்டப்பந்தயத்திற்கு இணையானது.
இருப்பினும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதித்து தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்.
இதனால் சிறப்பு 'டெட்' தேர்வில் அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், ஆந்திரா, தெலுங்கானா, பீஹார் உட்பட சில வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போல் சிறப்பு டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82ல் இருந்து 50 ஆக குறைக்க தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும்.
தேர்ச்சியில் அவர்களின் பணி அனுபவத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

