அஜித்குமார் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டரின் மனு தள்ளுபடி
அஜித்குமார் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டரின் மனு தள்ளுபடி
UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:00 PM
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டி.எஸ்.பி., உட்பட 4 போலீசாரை காவலில் வைக்க மதுரை கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தடை கோரி சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா, தன் காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகாரளித்தார். அக்கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27ல் தனிப்படை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.
போலீஸ்காரர்கள் ராஜா, ஆனந்த், சங்கர மணிகண்டன், பிரபு, கண்ணன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர். சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் மானாமதுரை டி.எஸ்.பி., சண்முக சுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. செப்.,10ல் ராஜா உள்ளிட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. சண்முக சுந்தரம், ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜாவை நீதிமன்ற காவலில் வைக்க அந்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கு தடை கோரி ரமேஷ்குமார் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி பி.முருகன் விசாரித்தார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதால் கைது செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. கைது நடவடிக்கை இல்லையெனில் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொலை வழக்காக மாற்றிய பின் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாதென சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார். நேற்று தீர்ப்புக்காக மீண்டும் இவ்வழக்கு வந்தபோது, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் விசாரணையை 9 மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டார்.
