/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் நாளை சர்வதேச ஹாக்கி அரங்கு திறப்பு
/
மதுரையில் நாளை சர்வதேச ஹாக்கி அரங்கு திறப்பு
ADDED : நவ 21, 2025 04:38 AM

மதுரை:மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி அரங்கு நாளை (நவ.22) திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.10.55 கோடி மதிப்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே இருந்த செயற்கை புல்தரை ஹாக்கி மைதானத்தை சீரமைத்து புதிதாக பார்வையாளர் காலரி, ஹாக்கி அரங்கு முழுமையாக முடிந்துள்ளது. இருபக்கமும் 1200 அமர்வதற்காக இரண்டு தற்காலிக காலரிகளில் 50 சதவீத பணிகள் நேற்று (நவ.20) வரை முடிந்துள்ளன. நிரந்தர பார்வையாளர் காலரியில் முதல்மாடியில் நடுவில் உள்ள வி.ஐ.பி., அறையில் நாற்காலிகள், இருபக்க பார்வையாளர் காலரியில் பிளாஸ்டிக் வகை சேர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேல்தளம் முழுவதும் ஒயரிங் வேலை முடிந்து, ஏசி பொருத்தப்பட்டுள்ளது. ஒருபக்க பார்வையாளர் காலரி தற்காலிகமாக 'மீடியா' அறையாக பயன்படுத்தப்பட உள்ளது.
போட்டிக்கு தனி வழி
ஹாக்கி அரங்குக்கு வருவதற்கென பின்பக்கமுள்ள வாசல் நவீன மின்விளக்குகளுடன் அழகுபடுத்தப்பட்டு செயற்கை நீருற்று அமைக்கப்பட்டு வருகிறது. நீரூற்றின் மேல்பகுதியில் 'ஹாக்கி மட்டை (ஸ்டிக்)' பொருத்தப்பட உள்ளது. பூச்சு வேலை, காலரியை ஒட்டியுள்ள தரைத்தளம், வாசலில் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இன்று (நவ.21) பணிகளை முடித்து ஹாக்கி அரங்கையும், காலரியையும் ஆணையத்திடம் ஒப்பந்த நிறுவனம் ஒப்படைக்கும். நாளை (நவ.22) மாலை 6:00 மணிக்கு துணைமுதல்வர் உதயநிதி, அரங்கை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பன்னாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு அரங்கு ஒப்படைக்கப்படும். போட்டி தொடங்கும் வரை வீரர்கள் புதிய அரங்கில் பயிற்சி விளையாட்டில் ஈடுபடுவர். தற்காலிக காலரிக்கான பணிகள் இன்னும் சில நாட்கள் தொடரும்.
எந்தெந்த அணிகள்
மதுரையில் ஏ, பி, இ பிரிவுகளின் கீழ் ஜெர்மனி, கனடா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா, நெதர்லாந்து, மலேசியா, பின்லாந்து, ஆஸ்திரியா நாட்டு அணிகள் விளையாடுகின்றன. வீரர்கள், அவர்களுக்கான மசாஜ் செய்வோர், சைக்காலஜிஸ்ட், உணவு நிபுணர், பயிற்சியாளர், அணி மேலாளர் உட்பட 25 பேர் அடங்கிய குழுவினர், நாளை (நவ.22) மதுரை விமான நிலையம் வருகின்றனர். இவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்கும் வகையில் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பிரவீன்குமார் நேற்று ஆணைய அதிகாரிகள் வேல்முருகன், ராஜாவுடன் ஆலோசனை நடத்தினார்.
நட்சத்திர ஓட்டல்கள் தயார்
ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பஸ் வீதம் 13 நாட்டு அணிகளுக்கு 13 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அவர்கள் தங்குவதற்காக 8 ஓட்டல்களில் அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணிக்கும் தனித்தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி மோதல்
நவ. 28ல் மதுரை, சென்னையில் ஒரே நாளில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடக்கின்றன. டிச. 12 வரை போட்டிகள் தொடரும். மதுரையில் காலை 9:00 மணி, 11:15 மணி, மதியம் 1:30 மணி, 3:45 மணிக்கு போட்டிகள் நடக்கும். டிச. 2ல் மதுரைக்கு வரும் இந்திய அணி ஸ்விட்சர்லாந்துடன் அணியுடன் இரவு 8:00 மணிக்கு மோதும். அதற்கேற்ப அன்று காலை 11:00 மணி, 1:15 மணி, மதியம் 3:00 மணி, 5:45 மணிக்கு போட்டிகள் நடக்கும். 5வது போட்டியாக இந்திய அணி மின்னொளியில் விளையாடும்.
பிரத்யேக செயற்கை புல்தரை அரங்கு அமைக்கப்பட்டுள்ளதால் போட்டி துவங்குவதற்கு முன்பாக 'ஸ்பிரிங்ளர்' கருவி மூலம் சாரல்மழை போல அரங்கில் தண்ணீர் தெளிக்கப்படும். சற்றே ஈரப்பதமான தரையில் தான் வீரர்கள் விளையாட முடியும். ஒவ்வொரு முறை போட்டி நடப்பதற்கு முன்பாக 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு அரங்கு தயார் நிலையில் வைக்கப்படும்.

