ADDED : டிச 07, 2024 06:28 AM
மதுரை: மதுரையில் 26வது சர்வதேச ஆவணம், குறும்பட விழாவை எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன், அமெரிக்கன் கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
டிச. 10 வரை நடக்கும் இவ்விழாவில் 22 நாடுகளைச் சேர்ந்த 30 திரைப்பட தயாரிப்பாளர்களின் ஆவண, குறும் படங்கள், அனிமேஷன் படங்கள், சோதனை முறை படங்கள் திரையிடப்படுகின்றன.
முதல்நாளான நேற்று காலையில் ரிசர்வ்லைன் மதுரை ஊடக திரைப்பட கல்வி அகாடமியில் படங்கள் திரையிடப்பட்டன. ஆவணப்பட பிரிவில் 'பிளட்லைன்', 'பியான்ட் ரேட்டிங்க்ஸ்', குறும்பட பிரிவில் 'காஷ்', குரேஷியாவின் 'சோலா', 'அனதர்', 'ப்ளூ' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. அனிமேஷன் பிரிவில் 'தி சேபியன் அர்ஜ்', சுவிட்சர்லாந்தின் 'லவ் பபிள்ஸ்', சோதனைமுறையிலான படப்பிரிவில் 'சுங்கு', இசை காணொலி பிரிவில் ஜெர்மனியின் 'ஸ்லாஸ்', 'தி ரேடியோ பீல்டு' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
மாலையில் ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் ஆவணப்பட பிரிவில் ரஷ்யாவின் 'தன்யா, சம்மர், வின்டர்', செக் குடியரசின் 'மூன் ஷாடோ' திரையிடப்பட்டன. அய்யர்பங்களா கலைடாஸ்கோப்பில் கார்த்திகாவின் 'ஒரே வாத்தியம்' அனிமேஷன் படம் திரையிடப்பட்டது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் லதா முருகன், மினி ஹரி, சந்தோஷ் ராம், அமல் ராஜ், அமுதன், பேராசிரியர்கள் ரேச்சல், தேன்மொழி, ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றனர். மதுரை காமராஜ் பல்கலை தொலைத் தொடர்பு துறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைத்தன.