/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பற்றாக்குறையாக திறக்கப்பட்ட தண்ணீர் கண்மாய்கள் நிரம்புவது சந்தேகம்தான்
/
பற்றாக்குறையாக திறக்கப்பட்ட தண்ணீர் கண்மாய்கள் நிரம்புவது சந்தேகம்தான்
பற்றாக்குறையாக திறக்கப்பட்ட தண்ணீர் கண்மாய்கள் நிரம்புவது சந்தேகம்தான்
பற்றாக்குறையாக திறக்கப்பட்ட தண்ணீர் கண்மாய்கள் நிரம்புவது சந்தேகம்தான்
ADDED : ஜன 09, 2024 06:08 AM

திருமங்கலம் : திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால் கண்மாய்கள் நிரம்புவது கேள்விக்குறியாக உள்ளது.
திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகா பகுதிகளில் 28 கண்மாய்கள் உள்ளன. பிரதான கால்வாயின் கிளை கால்வாய் வழியாக திருமங்கலம் பகுதிக்கு தண்ணீர் வரும் வழியில் 36 கண்மாய்கள் உள்ளன.
இதில் 7 கண்மாய்கள் நிரம்பி உள்ளன. திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் உள்ள 28 கண்மாய்களும் நிரம்பாமல் உள்ளன. பெரும்பாலான கண்மாய்கள் வறண்டே காணப்படுகிறது. இதுகுறித்து ஜன. 4ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து நேற்று திருமங்கலம் பிரதான கால்வாயில் கிளை கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு (நான்கு அடி கால்வாயில் ஒரு அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது) மிக குறைவாக உள்ளது.
அந்த தண்ணீரையும் ஒரே நேரத்தில் ஒரு கண்மாய்க்கு விடாமல் 5 முதல் 6 கண்மாய்களுக்கு பிரித்து வழங்கப்படுவதால் ஒவ்வொரு கண்மாயும் நிரம்புவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு மேலாகும் என்ற நிலை உள்ளது.
கடைக்கோடி கண்மாய் நிரம்புவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். அதற்குள் அணையின் தண்ணீர் குறைந்து திறப்பதை நிறுத்தி விட்டால் கால்நடைகள் கூட அவதிப்படும் சூழ்நிலை உருவாகும். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து கண்மாய்களுக்கு போதிய அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.