/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
/
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
ADDED : நவ 13, 2025 02:16 AM

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாகனம் மோதியதில், டூ வீலரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் காரின் காப்பீடு 2018ல் காலாவதியானதும், காரின் ஆயுட்காலம் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்து போனதும் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம், சிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத், 25. இவரது மனைவி சத்யா, 20, மகன் அஸ்வின் 2. இவர்கள், நேற்று முன்தினம், மதுரை அனஞ்சியூர் பகுதியில் துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு டூ வீலரில் குடும்பத்துடன் வீடு திரும்பினர். அவர்களுடன், நான்காவது ஆளாக டூ வீலரில் சோனை ஈஸ்வரி, 25, என்ற உறவினர் பெண்ணும் பயணித்தார்.
சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு இன்ஸ்பெக்டர் ஜெயராணி வந்த சுமோ கார், சக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்து டூ வீலரில் மோதியதில், பிரசாத், சத்யா, அஸ்வின் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சோனை ஈஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
உறவினர்கள் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால், மூவரின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
விபத்தை ஏற்படுத்திய போலீஸ் டிரைவர் பாலமுருகனை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி, இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனக்கூறி, நேற்று மதியம், 12:00 மணியளவில் அரசு மருத்துவமனை முன் ஒரு மணி நேரம் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர். நேற்றும் அவர்கள் உடல்களை பெறவில்லை.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய, டி.என்.23 ஜி0787 என்ற பதிவெண் கொண்ட போலீஸ் சுமோ கார், 2010 மே 31ல் சென்னை தெற்கு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆயுட்காலம் 2025 மே 30ல் முடிந்துள்ளது. வாகன காப்பீடு 2018 பிப்., 11ல் முடிந்துள்ளது. இதன் பிறகு இந்த காருக்கு தகுதிச்சான்று பெறவில்லை. காப்பீடும் புதுப்பிக்கப்படவில்லை.
வாகன பற்றாக்குறையால் காலாவதியான வாகனத்தை போலீசார் பயன்படுத்தியதே விபத்திற்கு காரணம்.
இன்சூரன்ஸ் காலாவதியானதால் காப்பீடு நிறுவனத்திடமிருந்து இறந்த பிரசாத் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்குவதிலும் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் செயல்படும் நவீனமயமாக்கப்பட்ட காவல் துறையில் இன்னும் காலாவதியான வாகனங்களும், புதுப்பிக்கப்படாத இன்சூரன்ஸ் போன்ற 'காலாவதி' நடைமுறையும் இருப்பது உயர் அதிகாரிகளின் மெத்தனத்தையே காட்டுகிறது.
தமிழகம் முழுதும் போலீஸ் வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

