/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாக்டோ ஜியோவின் நவம்பர் போராட்ட அறிவிப்புகள்
/
ஜாக்டோ ஜியோவின் நவம்பர் போராட்ட அறிவிப்புகள்
ADDED : அக் 28, 2025 05:06 AM
மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நவம்பர் முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள், அரசு நிலைப்பாடு குறித்து விவாதித்தனர்.
பத்து அம்ச கோரிக்கைகளாக 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 23.8.2010க்கு முன்பு பணியேற்ற ஆசிரியர்களை 'டெட்' அச்சுறுத்தலில் இருந்து காக்க சீராய்வு மனு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை மாநில அரசும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். கருணைப் பணிநியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்தது.
அமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டத்தை நவ., 1 ல் திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளனர். நவ.,10 முதல் 14 வரை பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் தாமதம், அதற்காக போராட்டம் நடத்துவது, அதில் பங்கேற்பது குறித்து வாகன பிரசார இயக்கம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
நவ.,18 ல் அடையாள வேலை நிறுத்தம் செய்வது, இதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பங்கெடுக்கச் செய்வது என்றும், அதன்பின்னும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்வது என்றும் தெரிவித்துள்ளனர்.

