/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மின்கட்டணம் பாக்கி ; 3 மாதங்களுக்கு ரூ.4.04 லட்சம் செலுத்தவில்லை
/
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மின்கட்டணம் பாக்கி ; 3 மாதங்களுக்கு ரூ.4.04 லட்சம் செலுத்தவில்லை
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மின்கட்டணம் பாக்கி ; 3 மாதங்களுக்கு ரூ.4.04 லட்சம் செலுத்தவில்லை
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மின்கட்டணம் பாக்கி ; 3 மாதங்களுக்கு ரூ.4.04 லட்சம் செலுத்தவில்லை
ADDED : ஏப் 17, 2024 05:48 AM

அலங்காநல்லுார், ஏப்.17- - முதல்வர் அறிவித்து விட்டார் என அதிவேகமாக கட்டப்பட்டு ஒரு நாள் மட்டுமே போட்டி நடத்தப்பட்ட அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு ரூ.4.04 லட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தவில்லை. மேலும் மைதானம் பராமரிப்பின்றி விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அலங்காநல்லுார் அருகே குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி கீழக்கரை வகுத்து மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதற்கான சாலைக்கு நில ஆர்ஜிதம், விரிவாக்க சாலை என ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டது. 'கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டினர். சுற்றுலாத்துறை அல்லது பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்படும் என கூறப்பட்டது.
கடந்த ஜன.,24ல் நடந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கடந்தாண்டு டிசம்பரில் மைதானத்திற்கு 110 கிலோ வாட் அளவு டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும் என அறிவுத்திருந்தாலும் ஒருநாள் மட்டுமே போட்டி நடந்தது. மைதானத்திற்கு மின் கட்டணமாக ஜனவரியில் ரூ.1.87 லட்சம், பிப்ரவரியில் ரூ.1.20 லட்சம், மார்ச் ரூ.97 ஆயிரம் என மொத்தம் ரூ.4.04 லட்சம் மின் கட்டணம் செலுத்தவில்லை. மேலும் வளாகத்தில் உள்ளே வெளியே பராமரிப்பு இல்லை. பல லட்சம் மதிப்பில் நடவு செய்த மரக்கன்றுகள் செடிகள் வெயிலில் வாடுகின்றன. ரூபாய் 2.75 லட்சம் 150 மரக்கன்றுகள் நடப்பட்ட அறிவிப்பு பலகை மட்டும் உள்ளது. போட்டி அன்று உணவு வழங்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள் மேய்ச்சல் பகுதியில் அகற்றப்படாமல் உள்ளதால் வனவிலங்குகள் பாதிக்கும் நிலை உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''மின் கட்டணம் செலுத்த பொதுப்பணித்துறை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்'' என்றனர்.
சமூக ஆர்வலர் கவுரிநாதன் கூறுகையில், ''சோழவந்தான் தொகுதிக்கு கல்லுாரி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. இந்த மைதானம், அடுத்ததாக 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் ஆளும் தரப்பினர், மக்களின் நியாயமான கோரிக்கையின் மீதும் தங்கள் ஆர்வத்தை செலுத்த வேண்டும்'' என்றார்.

