/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் ஸ்டேஷனை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
/
போலீஸ் ஸ்டேஷனை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
போலீஸ் ஸ்டேஷனை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
போலீஸ் ஸ்டேஷனை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 07:35 AM
மதுரை: 'தமிழகத்தில் போலீஸ் ஸ்டேஷனை ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் போக்கை கட்டுப்படுத்த வேண்டும்,' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் மரணமடைந்ததை கண்டித்து, கிருஷ்ணசாமி தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேட்டியின் போது கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் போலீஸ் ஸ்டேஷன் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு சி.பி.ஐ., க்கு மாற்றப்பட்டு தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. அதுபோல் இந்த வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும்.
'வேலியே பயிரை மேய்வதுபோல்',மக்களுக்கு பாதுகாப்பு வழங்க உருவாக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், தற்போது மக்களை அடக்குவதும், சித்தரவதை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.போலீஸ் ஸ்டேஷனில் எவ்வித அத்துமீறலும் நிகழாததை உறுதி செய்ய, சித்ரவதைக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். ஒருவர் கைது செய்யப்படும் போது, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. அதனை எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் பின்பற்றுவதில்லை.
அண்மை காலமாக போலீஸ் ஸ்டேஷனை ஆளுங்கட்சிகாரர்கள் தங்களுடைய சுயநலங்களுக்காக ஆக்கிரமித்துள்ளனர். கிளை செயலாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் நிலைக்கு இன்ஸ்பெக்டர் தள்ளப்படுகிறார். ஆளுங்கட்சியினரின் அதிகாரத்திற்கு பயந்து போலீஸார்பணிபுரியும் நிலை உள்ளது. இதற்குமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
இளைஞரணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் போராட்டத்தின் போது பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் உயர் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை. அரசுக்கு கட்டுப்படாத போலீஸ் உருவாவது ஜனநாயத்துக்கு கேடு. இதை கட்டுப்படுத்த ஒரு புதியஅமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாநில பொருளாளர் செல்லத்துரை, மாநகர செயலாளர் தாமோதரன், புறநகர் மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், பாண்டியராஜ் உடன் இருந்தனர்.