/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாமதமாகும் மானியத்தால் தவிக்கும் உள்ளாட்சிகள்
/
தாமதமாகும் மானியத்தால் தவிக்கும் உள்ளாட்சிகள்
ADDED : ஜூன் 13, 2025 02:08 AM

மதுரை:தாமதமாகும் மாநில நிதிக்குழு மானியத்தால் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சம்பளம், பொதுச் செலவினங்களுக்கு வழிதெரியாமல் தவிக்கின்றன.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. 388 ஊராட்சி ஒன்றியங்களும், 38 மாவட்ட ஊராட்சி அமைப்புகளும் உள்ளன. இந்த அமைப்புகளுக்கான செலவு நிதி மாதந்தோறும் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
இந்த அமைப்புகள் நிதியைக் கொண்டு தெருவிளக்கு அமைத்தல், குடிநீர் இணைப்பு, துாய்மைப் பணி என பல வகைகளிலும் செலவிடுகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் இந்தநிதியை பயன்படுத்தி தான்.
இந்த அமைப்புகளுக்கு கடந்த மே மாதம் வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட பல்வேறு செலவினங்களையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் தள்ளாடுகின்றன. கிராம ஊராட்சிகளைப் பொறுத்தவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை வசதியானவை.
மீதியுள்ள 8 ஆயிரம் கிராமங்களில் ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கவே போராடுகின்றன. இந்நிலையில் நிதி தாமதமானதால் ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துாய்மைக் காவலர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ், பொது செயலாளர் ரவி, பொருளாளர் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறுகையில், ''மாதந்தோறும் 2 ம் தேதிக்குள் நிதி விடுவிக்கப்பட்டு வந்தது. இம்மாதம் 12 நாட்களைக் கடந்தும் நிதிவராததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஊராட்சிப் பணிகளிலும் தொய்வு ஏற்படும். எனவே உடனே நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.