ADDED : அக் 08, 2025 12:05 AM
காதல், நகைச்சுவை வேடம் : ருக்மணி ஆர்வம்
நடிகை ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்தவாரம் 'காந்தாரா சாப்டர் 1' படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கூறுகையில், ''என்னை கிரஷ் என சொல்வது மகிழ்ச்சி என்றாலும் அதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. காரணம் அந்த பாராட்டு தற்காலிகமானது. காலப்போக்கில் மாறிவிடும். எளிய வேடத்தையும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். வரும்காலங்களில் காதல், நகைச்சுவை கலந்த கதைகளில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்'' என்றார்.
கார் விபத்தில் தப்பிய விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா ஆந்திராவின் உண்டவள்ளி பகுதியில் குடும்பத்தினர் உடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் யாருக்கும் காயம் இல்லை. காரின் முன்பகுதி மட்டும் லேசாக சேதமடைந்தது. ''எல்லாமே நன்றாக இருக்கிறது, யாரும் இதை எண்ணி குழப்பிக் கொள்ள வேண்டாம்'' என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
சிம்பு படத்தலைப்பு 'அரசன்'
சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு 'அரசன்' என தலைப்பிட்டு, முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இதை வெற்றிமாறன் இயக்குகிறார். வட சென்னை பின்னணியில் படம் தயாராகிறது. இதில் நாயகியாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயில், வடலுார் வள்ளலார் சத்ய ஞானசபையில் சிம்பு வழிபாடு செய்தார்.
நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம்
இயக்குனர் பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது என தகவல் பரவியது. இதுபற்றி அவர் கூறுகையில், ''கண்ணத்தாள், திருநெல்வேலி உள்ளிட்ட 10 படங்களை இயக்கி உள்ளேன். பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் கைதானார். அது நான் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது என் குடும்பத்தினருக்கு மன வருத்தத்தை தந்துள்ளது. நான் வேறு, அந்த பாரதி கண்ணன் வேறு. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை'' என்கிறார்.
'டியூட்'-க்கு வழிவிட்ட 'எல்ஐகே'
இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 'டியூட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே)' ஆகிய படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டன. தற்போது 'எல்ஐகே' தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் ''எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் 'டியூட்' படத்தை ரிலீஸ் செய்யச் சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் வேண்டுகோள் வைத்தும் பயனளிக்கவில்லை. எல்ஐகே படத்தை டிச. 18க்கு மாற்றுகிறோம்'' என தெரிவித்துள்ளனர்.