ADDED : ஜூன் 21, 2025 05:47 AM
மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் 15 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. இதற்காக அந்நாட்டு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் 'பேட்ரியாட்' படப்பிடிப்புக்காக வருகைதரும் படக்குழுவை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத படத்தலைப்பை இலங்கை சுற்றுலாத்துறை முன்கூட்டியே வெளியிட்டது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருந்தாலும், அதுதான் படத்தலைப்பு என்பதை அவர்கள் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.
கைநழுவிய மணிரத்னம் பட வாய்ப்பு
மலையாள நடிகர் சுரேஷ் கிருஷ்ணா, தமிழில் 'பொட்டு அம்மன்' படத்தில் மட்டும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ''மணிரத்னம் 'கடல்' படத்தை எடுப்பதற்கு முன், என்னை நடிக்க வரச் சொன்னார். நானும் அவரை சந்தித்தேன். முக்கிய கதாபாத்திரம் தருவதாக கூறி, நேரம்வரும்போது அழைப்பதாக மணிரத்னம் அனுப்பினார். 3 மாதங்களாக படப்பிடிப்பு துவங்கவில்லை. பின்னர் மணிரத்னம் கதையை வேறுவிதமாக மாற்றிவிட்டதாகவும், அதில் எனக்கான கதாபாத்திரம் இல்லாததால் அழைக்கவில்லை என்றும் தெரிந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது'' என்றார்.
ராஜமவுலி படத்திற்கு ரூ.50 கோடியில் காசி செட்
ராஜமவுலி படங்களில் ஹிந்து கடவுள்கள்,ஹிந்து தர்மம் போற்றும் சீன்கள் இருக்கும். இதற்கு பாகுபலியில் சிவன் பாடல், ஆர்ஆர்ஆர் படத்தில் ராமர் சாயல் என பல விஷயங்களை சொல்லலாம். அடுத்து மகேஷ்பாபுவை வைத்து ராஜமவுலி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் முக்கியமான காட்சிகளை காசியில் எடுக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, அங்கு படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்பதால், ஐதராபாத் பிலிம் சிட்டியில் காசி மாதிரியான செட்டை உருவாக்க சொல்லியுள்ளார். இதன் மதிப்பு 50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.