/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாவட்டம் வந்து சேர்ந்தது 58 கிராம கால்வாய் தண்ணீர் கண்மாய்களுக்கு அடுத்தடுத்து திறப்பு
/
மதுரை மாவட்டம் வந்து சேர்ந்தது 58 கிராம கால்வாய் தண்ணீர் கண்மாய்களுக்கு அடுத்தடுத்து திறப்பு
மதுரை மாவட்டம் வந்து சேர்ந்தது 58 கிராம கால்வாய் தண்ணீர் கண்மாய்களுக்கு அடுத்தடுத்து திறப்பு
மதுரை மாவட்டம் வந்து சேர்ந்தது 58 கிராம கால்வாய் தண்ணீர் கண்மாய்களுக்கு அடுத்தடுத்து திறப்பு
ADDED : நவ 01, 2025 03:01 AM

உசிலம்பட்டி: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் அக்.29 மதியம் 3:00 மணியளவில் திறக்கப்பட்ட தண்ணீர் தொட்டிப்பாலங்களைக் கடந்து 27 கி.மீ., பயணித்து மதுரை மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாயின் ஜூரோ பாயின்ட்டை 46 மணி நேரத்தில் அடைந்தது. அங்கிருந்து வலது, இடது கிளைக்கால்வாய்களில் செல்கிறது.
உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 2300 ஏக்கர்கள் பாசனம் பெறும் வகையில் 33 கண்மாய்களை இணைத்து, வைகை, பெரியாறுகளில் கிடைக்கும் உபரி நீரை வைத்து பாசனம் செய்ய தண்ணீர் வழங்க உருவானதுதான் 58 கிராம கால்வாய் திட்டம். வைகை அணையில் இருந்து பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்கிய பின்னர் கிடைக்கும் உபரி நீர் மட்டம் 67 அடிக்கு உயரும் போதுதான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது.
தண்ணீர் திறக்கக்கோரி தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த அக்.29 மதியம் 3:00 மணியளவில் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான கால்வாயில் திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி, மேல அச்சணம்பட்டி அருகே தொட்டிப்பாலங்களை அடுத்தடுத்து கடந்து நேற்று மதியம் 1:00 மணிக்கு மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனுார் அருகேயுள்ள ஜூரோ பாயின்ட்டை 46 மணி நேரம் கடந்து அடைந்தது.
தற்போது வலது, இடது கால்வாய் மூலம் கடைமடை கண்மாய்களான வடுகபட்டி, போடுவார்பட்டி, அய்யம்பட்டி கண்மாய்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேல அச்சணம்பட்டியில் உள்ள நீண்ட தொட்டிப்பாலத்தில் தண்ணீர் வருவதை பார்வையிட்ட தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், 'மதகின் உயரத்தை குறைக்கவும், நிரந்தர அரசாணை வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இரண்டும் சட்டச்சிக்கல் நிறைந்தவை. முதல்வர் மூலம் நல்ல தீர்வு காண முயற்சிப்பேன்' என்றார்.
நீர்வளத்துறை அதிகாரிகள், உசிலம்பட்டி தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி உடனிருந்தனர்.
தண்ணீரின் அளவு தெரியவில்லை 58 கிராம கால்வாயில் 316 கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறையினர் சொன்னாலும் 100 கனஅடி தண்ணீரே வருகிறது. மதகை அடுத்த கால்வாயில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் அளவீடு குறிக்கப்படவில்லை. நான்கு ஷட்டர்களை துாக்கி விட்ட பின் தண்ணீர் தருகிறோம் என்றால், எவ்வளவு என்ற கணக்கு வேண்டாமா. ஏற்கனவே 316 கனஅடிக்கு பதிலாக 150 கனஅடி தான் திறக்கப்படுகிறது. இதிலும் அளவீடு இல்லாததால் 58 கிராம கால்வாய்க்கு எவ்வளவு கனஅடி தண்ணீர் கிடைக்கிறது என்ற உண்மையான நிலவரம் தெரியவில்லை. எனவே மதகில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் வரும் இடத்தில் அடி அளவில் குறிப்பிட்டு எழுத வேண்டும். - மணிகண்டன் மதுரை மாவட்ட நஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர்

