ADDED : ஜூலை 11, 2026 05:09 AM

மதுரை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஜூலை 10 ம் தேதியை கறுப்பு தினமாக கடைபிடித்து மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாலை நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் வரதலட்சுமி முன்னிலை வகித்தார். மத்திய அரசு 2016 ல் மாநில அரசுக்கு அளித்த உத்தரவில், 'மாநில அரசுகள் விரும்பினால் அங்கன்வாடி மையங்களை தனியார் மூலமும் நடத்தலாம்' என தெரிவித்து இருந்தது. எனவே அந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
மத்திய அரசின் உத்தரவை கண்டித்தும், அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஓய்வு பெறும்போது கடைசி மாத ஊதிய அகவிலைப்படியுடன் பாதியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சி.ஐ.டி.யூ., மாநில குழுஉறுப்பினர் தேவராஜ், மாவட்ட செயலாளர் லெனின், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர். பொருளாளர் ரமேஷ்வரி நன்றி கூறினார்.
