UPDATED : நவ 01, 2026 07:12 PM
ADDED : நவ 01, 2026 07:06 PM
பேரையூர்: பேரையூர் பகுதியில் மக்காச்சோளத்தை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், பருத்தி, சோளம், பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்டவை மானாவரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பயிர்கள் நன்கு வளர்ந்து உள்ளன.
இப்பகுதி கண்மாய்கள் துார்வாராததால் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகள் முகாமிட்டுள்ளன. தரிசு நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் அங்கும் முகாமிட்டுள்ளன. பகலில் கண்மாய்கள், தரிசு நிலங்களில் தஞ்சமடைந்துள்ள இப்பன்றிகள் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். பன்றிகளை அப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
