ADDED : ஆக 18, 2025 03:29 AM

அலங்காநல்லுார் : மதுரை பொதும்பு பொற்குடில் நகர் கண்மாய்க் கரையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில் ஆடித்திருவிழா ஆக.8ல் கொடியேற்றம், பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு கும்மி கொட்டுதல் நடந்தது. ஆக.15ல் வாசன் நகர் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், அக்னி சட்டி, சக்தி கரகம் எடுத்து நையாண்டி மேளத்துடன் கோயில் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
ஆக.16ல் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* அலங்காநல்லுார் அருகே கீழ சின்னணம்பட்டி பிரிவு தீர்த்தக்கரை மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. உலக மக்கள் நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை, சுமங்கலி பூஜை நடந்தன. அம்மனுக்கு 16 வகை ஹோமங்களை தொடர்ந்து கன்னிகா வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக அம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீநிதி அம்மா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

