/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீவிர சிகிச்சை பிரிவில் கைதான மேயரின் கணவர்
/
தீவிர சிகிச்சை பிரிவில் கைதான மேயரின் கணவர்
ADDED : ஆக 14, 2025 04:43 AM

மதுரை: வரிவிதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் 49, தலைசுற்றல், ரத்த அழுத்த பிரச்னையால் மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.எம்.சி.யு.,) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக தி.மு.க.,வின் பொறுப்பு, பதவி, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மே 29ல் பொன்வசந்த் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநகராட்சி மண்டலங்களுக்கு உட்பட்ட ஓட்டல், நிறுவனங்கள், வீடுகளில் சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டு, அதற்கு கமிஷன் பெற்ற புகாரில் தொடர்புடையதாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டார். நேற்று காலையில் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு ஏற்கனவே ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ள நிலையில் கைது செய்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறியதால் போலீசார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர்.
மருத்துவப் பரிசோதனையில் ரத்த அழுத்தம்அதிகமாக இருந்ததால் இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ரத்த சர்க்கரை, ரத்தத்தில் பிற ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இ.சி.ஜி., அளவீட்டில் மாறுபாடு இருந்ததாக டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அவருக்கு தலைசுற்றல், நெஞ்சுவலி, படபடப்பு இருந்தது. இ.சி.ஜி., யில் இதயதுடிப்பு மாறுபாடு தெரிந்ததால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது.
தலைசுற்றலுக்கான காரணத்தை அறிய எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்யப்பட உள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.எம்.சி.யு.,) கண்காணித்து வருகிறோம் என்றார்.
பொன் வசந்திற்கு ஆதரவாக உறவினர்கள், கட்சிக்காரர்கள் பத்து பேர், வார்டின் முன்பாக காத்திருந்தனர். நான்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காவலில் வைக்க உத்தரவு மதுரை முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.1) ஆனந்த் நேற்று இரவு 7:40 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். பொன்வசந்த்தை ஆக.26 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.