/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
/
மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
ADDED : டிச 15, 2024 06:26 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் டிச.16 முதல் அடுத்தாண்டு ஜன.14 வரை நடக்கிறது. இந்நாட்களில் அதிகாலை பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானப்பால் வழங்கப்படும்.
இந்நாட்களில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3:00 மணிக்கு திறக்கப்படும். உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:00 மணிக்கு நடைசாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி இரவு 9:30 மணிக்குள் பூஜை முடிந்தவுடன் கோயில் நடைசாத்தப்படும்.
எண்ணெய் காப்பு உற்ஸவம்
இந்த உற்ஸவம் அடுத்தாண்டு ஜன.4 முதல் 13 வரை நடக்கிறது. இந்நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலகாப்பு நடக்கும். பிறகு புறப்பாடாகி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோயிலுக்கு செல்வார்.
ஜன.11ல் கோரதம், ஜன.12ல் கனகதண்டியலில் அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார். ஜன.13ல் சுவாமி ரிஷப வாகனம், அம்மன் மர சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வருவர்.
திருவெண்பா உற்ஸவம் ஜன.4 முதல் 13 வரை கோயிலின் நுாறு கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன் மாணிக்கவாசகர் எழுந்தருளுவார். தேவார குழுவினர் திருவெண்பா பாடி ஆடி வீதியில் வலம் வருவர்.
ஆருத்ரா தரிசனம்
ஜன.12 இரவு முதல் ஜன.13 அதிகாலை வரை ஆருத்ரா தரிசனம், அபிேஷகம், ஆராதனை நடக்கிறது. இக்கோயிலில் மட்டும்தான் பஞ்சலோகத்திலான பஞ்சசபை நடராஜக்குரிய 5 உற்ஸவர் சிலைகள் உள்ளன. பஞ்சசபை கொண்ட இக்கோயிலில் கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் உற்ஸவ சிலைகள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளுவர்.
இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மன் நுாறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். ஜன.13 காலை 7:00 மணிக்கு பஞ்சசபை 5 உற்ஸவ நடராஜர், சிவகாமி அம்மன் மாசிவீதிகளில் வலம் வருவர்.
திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் டிச.16 முதல் ஜன.13வரை கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும்.