UPDATED : நவ 10, 2026 05:41 PM
ADDED : நவ 10, 2026 05:38 PM

வேளாண் விளைபொருட்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதும், தானியங்கள், பயறு வகைகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பதும் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எதிர்பாராத மழையால் ஏற்படும் விளைச்சல் இழப்புகளைத் தவிர்க்க விவசாயிகள் சரியான தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து மழை பெய்யாத நாட்களில் அறுவடைப் பணிகளைத் திட்டமிட வேண்டும். நெற்பயிரில் 80 முதல் 85 சதவீத அளவிற்கு கதிர்கள் முதிர்ந்து தானியங்கள் பொன்னிறமாக மாறிய நிலையில் அறுவடை செய்யலாம். பயறுவகைப் பயிர்களில் காய்கள் முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறினால் அறுவடை செய்யவேண்டும்.
அறுவடை செய்த பயிர்களை வயலில் நீண்ட நேரம் குவித்து வைக்காமல் பாதுகாப்பான களத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். ஈரமான நிலத்தில் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது மண் இறுக்கமாவதையும் இயந்திரத்தின் சக்கரங்கள் சிக்கிக் கொள்வதையும் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பது எப்படி:
அறுவடை செய்த நெல், பயறுவகைப் பயிர்களை மழைநீர் படாத வகையில் தார்ப்பாய் அல்லது கூரையில் பாதுகாக்க வேண்டும். அறுவடை செய்த நெல், பயறுகளை கல், மண், களை, பிற கழிவுகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான தானியங்களைத் தார்ப்பாயின் மீது மெல்லிய அடுக்காகப் பரப்பி சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி கிளறி உலர்த்த வேண்டும். மழை பெய்யும் போது தானியங்களை உடனடியாக மூடி ஈரப்பதம் மீண்டும் அதிகரிக்காமல் பாதுகாக்க வேண்டும். நெல், சோளம், பயறு வகைகளில் பூஞ்சை வளர்ச்சி, நிறமாற்றம், முளைத்தல், தரம் குறைதல் ஏற்படாதிருக்க விரைவாக உலர்த்த வேண்டும். அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை நேரடியாக மண் தரையில் குவிக்காமல் தார்ப்பாய் அல்லது உயர்த்தப்பட்ட மேடைகளில் வைக்க வேண்டும்.
நெல் மற்றும் தானியங்களை சேமிப்பதற்கு முன் 12 முதல் 13 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும். பயறுவகைகளை 9 முதல் 10 சதவீத ஈரப்பதம் வரை உலர்த்தினால் நீண்டகாலச் சேமிப்பிற்கு நல்லது. சேமிப்புக் கிடங்குகளைச் சுத்தம் செய்து ஈரப்பதம், மழைநீர்க் கசிவு இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
தானியங்களை ஈரமான சுவர்கள், தரையில் படாமல் மரப்பலகைகள் அல்லது உயர்த்தப்பட்ட மேடைகளில் வைக்க வேண்டும். காற்று புகாத சேமிப்புப் பைகள், உலோகத் தானியக் கொள்கலன்களைப் பயன்படுத்தி பூச்சிகள் தாக்குதலைக் குறைக்கலாம். சேமிப்பில் உள்ள தானியங்களை அவ்வப்போது பரிசோதித்து பூச்சி, பூஞ்சை, ஈரப்பத பாதிப்புகள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதைக்காகச் சேமிக்கப்படும் தானியங்கள், பயறுகளைத் தனியாக வைத்துப் பாதுகாத்து அவற்றின் முளைப்புத்திறனைப் பராமரிக்க வேண்டும். மழைக்காலங்களில் அறுவடை செய்த விளைபொருட்களை உடனடியாக உலர்த்தி பாதுகாப்பான இடங்களில் சேமிப்பதன் மூலம் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதோடு விளைபொருட்களின் தரத்தையும் சந்தை மதிப்பையும் உயர்த்தலாம்.
– கமலா லட்சுமி, துணை இயக்குநர், நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம், மேலுார், மதுரை.
