ADDED : அக் 26, 2026 06:27 PM
மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே விளையாட சென்ற 3ம் வகுப்பு மாணவர், காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொலையா என விசாரணை நடக்கிறது.
மேலுார் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன். வெளிநாட்டில் பணிபுரிகிறார். மனைவி சத்யா. 2 மகள், மகன் முத்துவேலன் 7, உள்ளனர். வெள்ளலுார் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்று (அக்.,25) விளையாட சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இன்று (அக்.,26) அப்பகுதி ராஜாங்கம் என்பவரின் பாழடைந்த ஓட்டு வீட்டில் காயத்துடன் உடல் கண்டெடுக்கப்பட்டது.
எஸ்.பி., தேவநாதன், ஏ.டி.எஸ்.பி., வேணுகோபால், டி.எஸ்.பி., சிவக்குமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ‘மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும்’ என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே முத்துவேலன் கழுத்தில் கயிறு தழும்பு இருப்பதாகவும், வாயில் ரத்தம், கண்ணிற்கு கீழ் காயம் இருப்பதாலும் இது கொலைதான் என தெரிவித்துள்ள உறவினர்கள், ‘புகார் அளித்த போதே போலீசார் உடனே தேடியிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்’ என்றனர்.
