UPDATED : அக் 23, 2026 08:32 PM
ADDED : அக் 23, 2026 08:28 PM
திருமங்கலம்: ‛கப்பலுாரில் புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது’ என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தரசு கூறினார்.
கப்பலுார் துணை மின் நிலையத்தில் இருந்து சிட்கோவில் உள்ள 550க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கப்பலுார், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. சிட்கோவில் தொழில் நிறுவனங்களுக்கு மின்விநியோகம் செய்ய 16 மெகாவாட் மின் திறன் கொண்ட 3 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இதில் ஒன்று பழுதானதால் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் பல மணி நேரம் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தரசு கூறியதாவது: மின்வினியோகம் செய்யும் மூன்று டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று பழுதடைந்தது. இதனால் இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று, கப்பலுார் துணை மின் நிலையத்தில் நல்ல நிலையில் உள்ள இரண்டு டிரான்ஸ்பார்மர் மூலமாக விநியோகம் சீராக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டது.
டிரான்ஸ்பார்மரில் என்ன பழுது என ஆராயப்பட்டு சிறிய பழுதானால் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சீரமைக்க இயலாத சூழ்நிலையில் புதிய டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்படும். புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
