இனி அரைகுறை திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கிடையாது
இனி அரைகுறை திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கிடையாது
UPDATED : நவ 02, 2026 05:41 PM
ADDED : நவ 02, 2026 05:36 PM
மதுரை: 'இனி தணிக்கை சான்றிதழ் பெற முழுமையடையாத திரைப்படங்களை சமர்ப்பிக்கக் கூடாது' என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தயாராகி வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய மத்திய தணிக்கை வாரியம் உள்ளது. இதன்மூலம் 2020 முதல் 2025 வரை 71 ஆயிரத்து 963 திரைப்படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2024-–25 ஆண்டில் 3033 படங்களுக்கு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இந்நிலையில் தணிக்கைக்கு அனுப்பும் திரைப்படம் முழுமையான இறுதிப்பதிப்பாக இருக்க வேண்டும். படத்தின் பின்னணி இசை, ஒலிக்கலவை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அவசியம் என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளதாவது:
திரைப்படத்தின் தலைப்புகள், டிரெய்லர் விளம்பரங்களில் இடம்பெறும் பெயர்கள், விண்ணப்பத்தில் இருந்தாலும் அவை இறுதியானவை அல்ல. தணிக்கை குழுவின் ஆய்வு, திருத்தங்களுக்கு உட்பட்டு தலைப்பில் மாற்றம் செய்யப்படலாம். எனவே, சான்றிதழ் கிடைக்கும் முன்பே தலைப்பை இறுதி செய்ததாக விளம்பரப்படுத்தக்கூடாது.
இடைக்கால காட்சிகள், தற்காலிக கிராபிக்ஸ் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பித்தால், அவை முழுமையற்ற விண்ணப்பங்களாக கருதப்படும். இதனால் சான்றிதழ் வழங்குவதிலும் தாமதம் ஏற்படலாம். திரைப்பட வெளியீட்டு தேதியை காரணம் காட்டி தணிக்கை நடைமுறைகளை விரைவுபடுத்தக் கோரமுடியாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் தணிக்கைக்கு விண்ணப்பிக்கும் முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
