
பாதாள சாக்கடையால் அவதி
மாநகராட்சி 70வது வார்டு பைபாஸ் ரோடு சத்தியமூர்த்தி நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுதும் தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் முதியோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை அடைப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- ரங்கன், பைபாஸ் ரோடு.
குண்டு குழி ரோடு
மாநகராட்சி 26வது வார்டு மகாலட்சுமி நகர் 3வது தெரு 5வது குறுக்குத் தெருவில் ரோடு தோண்டப்பட்டு சரியாக மூடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. நடந்து செல்வோர், டூவீலரில் பயணம் செய்வோர் தடுக்கி விழும் நிலையுள்ளது. மாநகராட்சி சார்பில் தரமான ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலகுருசாமி, மகாலட்சுமி நகர்.
கழிவுநீர் தேக்கம்
கோவில்பாப்பாக்குடியில் காலி மனைகளில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் மாசடைகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகாமுனி, கோவில்பாப்பாக்குடி.
குப்பைக் கிடங்கால் அவதி
சோழவந்தான் தென்கரை ஊராட்சியில் வைகையின் இணைப்பு பகுதியான நிலையூர் கால்வாய் பாலம் அருகே குப்பை குவிந்து கிடங்காக மாறியுள்ளது. சிலர் குப்பையை எரிப்பதால் வெளிவரும் நச்சுப் புகையால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவுரிநாதன், தென்கரை.
தெருவிளக்கு தேவை
மதுரை வைகை வடகரையில் காமராஜர் பாலத்தின் கீழ் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து, வழிப்பறி அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் போதிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மனோ, தெப்பக்குளம்.
தண்ணீரை சேமியுங்க
ஆரப்பாளையம் - அருள்தாஸ்புரம் பகுதயில் உள்ள வைகை தடுப்பணையில் தண்ணீரை சேமிக்க வழியின்றி முழுவதுமாக வெளியேறி வறண்டு காணப்படுகிறது. கோடை காலம் விரைவில் துவங்கவுள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்.
- ஹரிஹரன், ஆரப்பாளையம்.
மாடுகளால் தொல்லை
புதுார் ஜவஹர்புரம் முனியாண்டி கோயில் பின்புறம் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவை 24 மணி நேரமும் ரோட்டில் திரிவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். டூவீலர்களில் செல்வோர் நிலைத் தடுமாறி கீழே விழும் நிலையுள்ளது. சிறுவர்கள் தெருவில் விளையாட முடியாமல் பயப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, ஜவஹர்புரம்.

