/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செப்டம்பருக்கான ஒருபோக சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
செப்டம்பருக்கான ஒருபோக சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
செப்டம்பருக்கான ஒருபோக சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
செப்டம்பருக்கான ஒருபோக சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 06, 2024 05:15 AM

மதுரை: இந்தாண்டு முதல்போக சாகுபடிக்கு ஜூலையில் தண்ணீர்
திறந்து விட்ட நிலையில், செப்டம்பருக்கான ஒருபோக சாகுபடிக்கும் தண்ணீர்
கிடைக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், மதுரை
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேரணை முதல் கள்ளந்திரி வரை 46 ஆயிரம் ஏக்கர் முதல்போக சாகுபடிக்கு ஜூலை 3 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் வரத்து இல்லாததால் ஒரு மாதம் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை மூலம் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
வைகை, முல்லைப் பெரியாறு அணைகளின் மொத்த அளவு 6000 மில்லியன் கனஅடியைத் தாண்டும் போதுதான் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். நேற்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.70 அடி (மொத்த உயரம் 152 அடி), வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடி (மொத்த உயரம் 71 அடி), இரு அணைகளின் மொத்த கொள்ளளவு 6659 மில்லியன் கனஅடியாக உள்ளது.
தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் செப். 15ல் ஒரு போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்கின்றனர் நீர்வளத்துறையினர்.
அவர்கள் கூறியதாவது: மேலுாரில் 85 ஆயிரத்து 653 ஏக்கர், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 439 ஏக்கர் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் இந்தாண்டு நெல் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்தாண்டு ஆக. 5ல் இரு அணைகளின் மொத்த கொள்ளளவே 3830 மில்லியன் கனஅடி தான் இருந்தது. மழையில்லாத நிலையில் கள்ளந்திரி முதல் போக சாகுபடிக்கே தண்ணீர் தாமதமாகத்தான் திறக்கப்பட்டது.
மேலுார், திருமங்கலம் ஒருபோகத்திற்கு பற்றாக்குறையால் 10 நாட்களுக்கு குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இருபோக சாகுபடிக்கான 210 கண்மாய்களில் 40 முதல் 50 சதவீத தண்ணீரும், ஒருபோக சாகுபடிக்கான 81 கண்மாய்களில் 30 சதவீத தண்ணீரும் உள்ளது. மழை தொடர்வதால் கண்மாய்களுக்கும், நேரடி பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும் என்றனர். அணையின் நீர்வரத்தை கண்காணித்து கொண்டிருக்கும் விவசாயிகளும் மொத்த கொள்ளளவான 6000 கனஅடியை தாண்டியதால் நிம்மதி அடைந்தனர்.