/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விடுதலையானவர் பெயரை தீர்ப்பு நகலில் நீக்க உத்தரவு
/
விடுதலையானவர் பெயரை தீர்ப்பு நகலில் நீக்க உத்தரவு
ADDED : மார் 03, 2024 05:12 AM
மதுரை : குற்ற வழக்கில் விடுதலையானவர் பெயரை, இணையதள தீர்ப்பு நகலிலிருந்து நீக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கு பதியப்பட்டது. அவருக்கு சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்தது. அவர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.
அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை, 2011ல் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர் மறுமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் குடும்பம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் தீர்ப்பு நகலில் உள்ளன. அது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
என் தனிப்பட்ட மற்றும் கடந்தகால வாழ்க்கையின் விபரங்களை பொதுவெளியில் பகிர்வது ஏற்புடையதல்ல. தனியுரிமையை பாதிக்கிறது. பெயர் மற்றும் பிற அடையாளங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இதை 2021ல் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து அந்நபர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனு அனுமதிக்கப்படுகிறது. மனுதாரரின் பெயர் மற்றும் அவரது அடையாளத்துடன் தொடர்புடைய விபரங்களை நீக்கி திருத்தியமைக்கப்பட்ட தீர்ப்பு நகலை மட்டும் வெளியிடுவது அல்லது பதிவேற்றம் செய்வதை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், உயர் நீதிமன்றக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்ப்பின் முழுமையான மற்றும் திருத்தப்படாத விபரங்கள் நீதிமன்ற ஆவணத்தின் ஒரு பகுதியாக தொடரும் என குறிப்பிடத் தேவையில்லை.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

