ADDED : அக் 26, 2025 04:13 AM

சோழவந்தான்: நெடுங்குளம் ஊராட்சி அலுவலகம் முன்புள்ள வேப்ப மரத்தை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
அப்பகுதி குருவம்மாள் கூறியதாவது: இங்கு ஊராட்சி அலுவலகம், பள்ளிக்கூடம், குடியிருப்புகளுக்கு நடுவே வேப்பமரம் அமைந்துள்ளது. வேர்கள், கிளைகள் நன்கு படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஊராட்சி அலுவலகம் முன்பு பதித்திருந்த 'பேவர் பிளாக்' கற்கள் பெயரத் தொடங்கியுள்ளன.
மரத்தின் வேர்கள் தரையில் ஊடுருவி ஊராட்சி அலுவலகம், பள்ளி கட்டடத்தை சேதம் அடையச் செய்கிறது. படர்ந்து வளரும் கிளைகளாலும் கட்டடத்திற்கு ஆபத்து உள்ளது. கிளைகள் முறிந்து விழும்போது குடியிருப்புகள் சேதமடைகின்றன. உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு இடையே கிளைகள் செல்வதால் லேசாக காற்று வீசினாலும் கூட மின் கம்பிகளில் உரசி மின்தடை ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்ற வேண்டும் என்றார்.

