/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலிப்பணியிடங்களால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்
/
காலிப்பணியிடங்களால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்
ADDED : ஜன 16, 2025 05:15 AM
பேரையூர்: சேடபட்டி ஒன்றியத்தின் 8 ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளதால், தாங்கள் கூடுதல் பணி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக ஊராட்சி செயலர்கள் பலரும் புலம்புகின்றனர்.
ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் வீட்டு வரி, சொத்து வரி, குழாய் வரி உள்ளிட்டவை வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விவரங்களை சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கின்றனர். இவற்றில் ஊராட்சி செயலர்களின் பணி முக்கியமானதாக உள்ளது.
சேடபட்டி ஒன்றியத்தின் 31 ஊராட்சிகளில் வண்டப்புலி, தாடையம்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, காளப்பன்பட்டி, முத்துநாகையாபுரம், உத்தபுரம் ஆகிய 8 ஊராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இந்த ஊராட்சிகளை கூடுதல் பணியாக கவனிக்க, அருகிலுள்ள ஊராட்சி செயலர்களை நிர்பந்திக்கின்றனர். இதனால் ஊராட்சி செயலர்கள் பணிப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாக புலம்புகின்றனர்.
ஒரு செயலர் இரு ஊராட்சிகளை கவனிப்பதால் பணிச்சுமை ஏற்படுவதோடு, ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளும் முறையாக கவனிக்கப்படாமல் பாதிக்கும் நிலை உள்ளது. பல ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேறாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப வளர்ச்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.