/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெருவிளக்கை பராமரிக்க இயலாமல் தவிக்கும் ஊராட்சிகளுக்கு 'ஷாக்' கொடுக்கிறாங்க... : மின்வாரியம் கைவிரிப்பதால் ஆபத்தான முறையில் சரிபார்ப்பு

ADDED : நவ 22, 2025 04:10 AM

மதுரை:மதுரை மாவட்டத்தில் தெருவிளக்குகளை சரிசெய்ய மின்வாரிய ஒத்துழைப்பு இல்லாததால் ஊராட்சிகள் தவிப்பில் உள்ளன. இதனால் அங்கீகாரம், பயிற்சி இல்லாத ஊழியர்களை
ஊராட்சிகள் நியமித்து சரிசெய்யும் நிலை உள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் பிரச்னைகளை பராமரிக்க பொறியாளர்கள் பிரிவு உள்ளது. இந்நிலை ஊராட்சிகளில் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு தெருவிளக்குகளை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் மின்வாரிய பொறியாளர்களை தொடர்பு கொள்ளும். மின்இணைப்பை துண்டித்து விளக்கை மாற்ற ஊழியர்களை அனுப்பி வைப்பர்.
இதற்கு ஒரு மின்கம்பத்திற்கு ரூ.10 அல்லது ரூ.20 வழங்கப்பட்டது. தற்போது தனியார் ஊழியர்களை பயன்படுத்த ரூ.100 வரை செலவாகிறது. ஊராட்சிகளில் 300 முதல் 500 மின்விளக்குகளாவது இருக்கும். இச்செலவுகளை ஊராட்சி செயலர்களே கவனிக்க வேண்டியுள்ளது.
சில ஊராட்சிகளில் அவர்களே மின்இணைப்பை துண்டித்து தெருவிளக்கை சரிசெய்யும் நிலை உள்ளது. இதனால் பல இடங்களில் விபத்து, உயிரிழப்பு நடக்கிறது. இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டோருக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலை உள்ளது.
ஊராட்சி செயலாளர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் தெருவிளக்குகளை சரிசெய்வதில் பிரச்னை உள்ளது. மின்வாரிய ஊழியர்களை அழைத்தால் 'ஆட்கள் பற்றாக்குறை' எனக்கூறி ஒத்துழைப்பு தருவதில்லை.
இதனால் அங்கீகாரம், பயிற்சி இல்லாத ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டியுள்ளது. எனவே ஊராட்சிகளில் மின்பராமரிப்பு, பிளம்பிங் பணிகளை கவனிக்க பணியாளர்கள் அவசியம் என்றனர்.
சப்ளையை நிறுத்துவோம்
மின்வாரியத்தினர் கூறியதாவது: உள்ளாட்சிகளில் மின் பிரச்னையை அவர்கள்தான் சரிசெய்ய வேண்டும். மின்வாரியத்தினர் பராமரிப்பு பகுதியில் மின்சப்ளையை நிறுத்தி உதவுவர். மின்கம்பத்தில் விளக்குகளை சரிசெய்ய அவர்கள் ஊழியரை நியமித்து கொள்கின்றனர். வாரியத்தில் நீண்டகாலமாக களப்பணியாளர்கள், ஒயர்மேன்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படி இருக்கையில் இப்பணிகளை கவனிப்பதும், அதில் சுணக்கம் ஏற்படுவதும் இயல்பானதுதான் என்றனர்.