/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல குத்தகைக்கு விடப்படும் பார்சல் வேன்கள்
/
ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல குத்தகைக்கு விடப்படும் பார்சல் வேன்கள்
ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல குத்தகைக்கு விடப்படும் பார்சல் வேன்கள்
ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல குத்தகைக்கு விடப்படும் பார்சல் வேன்கள்
ADDED : செப் 24, 2025 08:31 AM
மதுரை : ரயில்களில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்ல பார்சல் வேன்கள் குத்தகைக்கு விடப்படுகின்றன.
மதுரை கோட்ட ரயில்வே மதுரை, திண்டுக்கல், போடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், ராஜபாளையம், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்செந்துார், செங்கோட்டை ஆகிய 13 ஸ்டேஷன்களில் பார்சல் சேவை வழங்குகிறது.
இங்கு மின்னணு எடையிடல், கணினிமயமான முன்பதிவு கவுன்டர்கள், பொருட்களை டிராக் செய்யும் வசதி, பார்சல் இயக்கத்தின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பொருட்களை சிறிய அளவில் எடுத்துச் செல்ல வழிசெய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரயில்களின் முன், பின் பகுதியில் பயணிகள் பெட்டிகளுடன் கூடிய பார்சல் வேன்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, மீன் உட்பட பல்வேறு பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
குறுகிய, நீண்டகால குத்தகை
பருவகால பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ப 10 முதல் 90 நாட்கள் வரை குறுகிய காலத்திற்கும், நீடித்த வணிக பயன்பாட்டுக்கு 90 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலும் பார்சல் வேன்கள் மின்னணு ஏலம் மூலம் விடப்படுகிறது.
மதுரை - சென்னை 'பாண்டியன்' எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - அயோத்தியா கன்டோன்மென்ட், திருநெல்வேலி - காந்திதாம், துாத்துக்குடி - ஓகா, திருநெல்வேலி - பிலாஸ்பூர் ஆகிய ரயில்களில் பயணிகள் பெட்டியுடன் 3.9 டன் கொள்ளளவு கொண்ட வேன்களும், திருநெல்வேலி - ஜம்மு ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா ரயிலில் 24 டன் கொள்ளளவு கொண்ட பெரிய பார்சல் வேனும் குத்தகைக்கு விடப்படுகிறது.
இதற்கான மின்னணு ஏலம் நாளை (செப். 25) காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. விவரங்களுக்கு www.ireps.gov.in ஐ பார்வையிடலாம்.