ADDED : ஆக 19, 2026 06:14 PM
மதுரை, ஆக. 20 –
மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பார்த்தீனியம் விஷச்செடி பற்றிய விழிப்புணர்வு, அவற்றை அழிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசியதாவது: வளர்ந்த பார்த்தீனியம் செடி, ஒரு பருவத்தில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விதைகளை உருவாக்கும். நீண்ட விதை உறக்க காலம் உள்ளதால் பல்லாண்டுகள் கழித்து மீண்டும் முளைக்கும். செடியின் இலை, பூ, விதைகள் அனைத்துமே மனிதர், விலங்குகளுக்கு ஒவ்வாமை நோயை உருவாக்கும்.
விவசாயத்திற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் மருத்துவ ரீதியாக இதனை விஷச் செடி என்கிறோம். இதை முற்றிலும் அழிக்க வேண்டும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த இச்செடி பூக்கும் முன்பு கையால் பிடுங்கி அழிக்கலாம். அல்லது இயந்திர உழவு செய்தும் அழிக்கலாம். தண்ணீரில் உப்பை கரைத்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
‘சைகிரமாம்மா பைகாலரேட்டா’ என்ற வண்டுகளைச் செடியில் விட்டும் கட்டுப்படுத்தலாம். பயிர் சாகுபடி இல்லாத போது கிளைப்போசேட் களைக்கொல்லி தெளித்தும் இச்செடியை கட்டுப்படுத்தலாம் என்றார். 40 விவசாயிகள் பங்கேற்றனர்.
