/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரவு நேர பஸ்களால் அவதிக்குள்ளாகும் பயணிகள்
/
இரவு நேர பஸ்களால் அவதிக்குள்ளாகும் பயணிகள்
ADDED : செப் 30, 2024 04:58 AM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண வார இறுதி நாட்களில் இதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் வார இறுதியுடன் தொடர் விடுமுறை, முகூர்த்தம் போன்ற விசேஷ காலங்களில் இரவு நேர பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இந்நாட்களில் அதிகாலை 12:00 மணி முதல் 4:00 மணி வரை போதுமான பஸ்கள் இன்றி பயணிகள் குறிப்பாக குடும்பமாக வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். சென்னை, பெங்களூருவில் இருந்து வரும் விரைவு பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. மதுரையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் குறைவாக இருப்பதால் அதிகாலையில் ஓடிஓடி இடம்பிடிக்கும் பயணிகள் நிலை பரிதாபமாக உள்ளது.
எனவே விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரங்களில் திரண்டிருக்கும் பயணிகள் கூட்டத்திற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் பயணிகள்
திருமங்கலத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டுகளுக்கு பெரியார் பஸ்ஸ்டாண்ட் வழியாக இரவு நேர சிட்டி பஸ்கள் வருகின்றன. இவற்றில் நள்ளிரவில் பெரும்பாலான பஸ்கள் திருப்பரங்குன்றம் செல்லாமல் பைபாஸ் ரோடு வழியாக வருகின்றன. திருப்பரங்குன்றம் பயணிகளை ஹார்விபட்டி, பைபாஸ் ரோடு பகுதியில் வெயிலுகந்த அம்மன் கோயில் அருகே இறக்கி விட்டுச் செல்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இரவில் ரயில்வே லைனை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே திருமங்கலத்தில் இருந்து வரும் பஸ்களை திருப்பரங்குன்றம் நகர் வழியாக வந்துசெல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.