/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் பயணிகள் அவதி
/
திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் பயணிகள் அவதி
ADDED : டிச 30, 2024 05:15 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை பிரச்னையால் தூத்துக்குடி - மைசூரு ரயில் பயணிகள் அவதியுறுகின்றனர்.
தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் முதலாவது நடைமேடையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கிறது. அந்த ரயிலின் கடைசி பகுதியில் உள்ள நான்கு பெட்டிகள் நடைமேடையைத் தாண்டி வெளியில் நிற்பதால் பயணிகள் ஏறி இறங்குவதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
மதுரை ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவசுந்தரம் கூறியதாவது: அந்த ரயில் தினம் இரவு 7:40 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் நின்று செல்கிறது. முதலாவது நடைமேடையின் நீளம் குறைவாக இருப்பதால் அந்த ரயிலின் கடைசி நான்கு பெட்டிகள் நடைமேடையை தாண்டி நிற்கிறது. அதில் இரண்டு பெட்டிகள் முன்பதிவு இல்லாத பயணிகளுக்கானது.
அந்தப் பெட்டிகள் நிற்கும் பகுதியில் நடைமேடை உயரம் போதுமானதாக இல்லை. எனவே, பயணிகள் ரயிலில் ஏறவும், இறங்கவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதியும் இல்லை. ஒரு நிமிடம் மட்டுமே நிற்பதாலும், மூட்டை முடிச்சுகள், குடும்ப சகிதமாக வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர். முன்பதிவு இல்லா பயணிகளில் வயதானோர், கர்ப்பிணிகள், சிறுவர்கள், கைக்குழந்தைகளுடன் வருவோர் பாதுகாப்பில்லாததாக உணர்கின்றனர்.
பலர் ஏற முடியாமல் ரயிலை விட்டு விடும் நிலையும் ஏற்படுகிறது. குடும்பமாக வருவோரில், பாதிப்பேர் ரயிலில் ஏறும் முன் கிளம்பிவிடுகிறது. எனவே சிலர் ரயிலை தவறவிடுகின்றனர்.
இந்த ரயிலின் கடைசி நான்கு பெட்டிகள் நிற்கும் பகுதியில் தரை மட்டத்திற்கு மட்டும் சிலாப் போடப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை.
முதலாவது நடை மேடையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பலமுறை ஆலோசனை கூட்டங்களில் வலியுறுத்தி உள்ளேன். மனுக்களும் அளித்துள்ளேன். பயணிகளின் வசதிக்காக முதலாவது நடைமேடையை விரிவாக்கம் செய்ய உடனே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.