/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிரிவல பக்தர்களுக்கு பேவர் பிளாக் நடைமேடை
/
கிரிவல பக்தர்களுக்கு பேவர் பிளாக் நடைமேடை
ADDED : நவ 14, 2024 06:55 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசல் முதல் மலையை சுற்றி 3.25 கி.மீ., கிரிவல ரோடு உள்ளது. பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். தினமும் காலை, மாலையில் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ஏராளமான வாகனங்களும் சென்று திரும்புகின்றன.
பவுர்ணமி நாட்களில் கிரிவல பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க தனி பாதை அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசின் மூலதன மானிய நிதி ரூ.2 கோடியில் கிரிவல ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் நடைமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா துவக்கி வைத்தார். கவுன்சிலர் சிவசக்தி, உதவி பொறியாளர் இளங்கோவன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டியன், சுதன் பங்கேற்றனர்.