ADDED : ஆக 10, 2026 12:50 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி, சமயநல்லுார், பரவையில் மெயின் ரோட்டோர மரங்களில் சில நிறுவனங்கள் 'பைபர் பிளாஸ்டிக் அட்டைகளை ஆணி அடித்து விளம்பரம் செய்வது தொடர்கிறது.
மக்கள் கூடும் இடங்கள், பஸ் ஸ்டாப் அருகே உள்ள எல்லா மரங்களிலும் விளம்பர அட்டைகளை பொருத்துவதற்காக பெரிய, பெரிய ஆணிகளால் அடித்து வைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இவற்றை தாண்டி மிஞ்சியுள்ள மரங்களின் உயிரை பறிப்பது போன்று, விளம்பரம் செய்வதற்காக ஒவ்வொரு மரதத்திலும் ஆணிகளால் துளைத்து துவம்சம் செய்கின்றனர்.
சமூக ஆர்வலர் ஊர்மெச்சிகுளம் பாலமுருகன் கூறியதாவது: மரங்கள் பல உயிர்களுக்கு வசிப்பிடமாக உள்ளது. மரத்தில் ஆணி அடிப்பதால் அப்பகுதி அழுகி பாதிக்கும். இதனால் ஆயுள் குறைந்து பட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. சிலர் இரும்புக் கம்பிகளை கட்டுவதால் வளர்ச்சி பாதிக்கிறது.
இதுபோல் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தங்களது தவறை உணரும் விதமாகவும், மற்றவர்கள் இதுபோன்று செய்யாமல் இருக்கவும் அந்நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
