ADDED : ஆக 10, 2026 12:49 AM
பேரையூர்: கல், கிராவல் மண், செம்மண், செங்கல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் கல்குவாரி, கிரஷர், செங்கல் காளவாசல்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகள் கல், செங்கல், மண் ஏற்றிச் செல்கின்றன. பொருட்களை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன.
அதனால் கல், மண், செங்கலில் உள்ள மண்துகள்கள் காற்றில் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால் அவர்கள் நிலை குலைந்து போவது தினசரி அரங்கேறுகிறது. இதன் விளைவாக அவர்கள் விபத்துகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் கல், செங்கல்கள் ஆங்காங்கே சரிந்து ரோடுகளில் விழுகின்றன. தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும் வாகனங்கள் மீது போலீஸ், போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
