ADDED : பிப் 01, 2024 04:13 AM
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி லட்சுமிபுரத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் - கூடக்கோவில் ரோட்டில் லட்சுமிபுரத்திற்கு செல்லும் விலக்கில் டவுன் பஸ்கள் முறையாக நிற்பது இல்லை.
அவ்வாறு நின்றாலும் 100 மீட்டர் 200 மீட்டர் தள்ளி சென்று நிறுத்துவதால் பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஓடிச் சென்று ஏறவேண்டியுள்ளது.
மேலும் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் டிரைவர்கள் பலர் நிறுத்துவது இல்லை.
மேலும் லட்சுமிபுரம் பிரிவில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து பஸ் ஸ்டாப் கட்ட நிதி ஒதுக்கிய போதும், இடம் தனியாருக்கு சொந்தமானது எனக் கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையெல்லாம் கண்டித்து நேற்று பெண்கள், பள்ளி குழந்தைகள் திருமங்கலம் - கூடக்கோவில் ரோட்டில் 40 நிமிடங்களுக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.