/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு அரசியல் கட்சியினர் தொகுதி, இடம் மாறியவர்களுக்கு உதவிடலாமே
/
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு அரசியல் கட்சியினர் தொகுதி, இடம் மாறியவர்களுக்கு உதவிடலாமே
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு அரசியல் கட்சியினர் தொகுதி, இடம் மாறியவர்களுக்கு உதவிடலாமே
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு அரசியல் கட்சியினர் தொகுதி, இடம் மாறியவர்களுக்கு உதவிடலாமே
ADDED : நவ 20, 2025 06:11 AM

மதுரை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அரசியல் கட்சிகள் நியமித்துள்ள ஏஜன்டுகள் மூலம், தொகுதி, இருப்பிடம் மாறியதால் பாதிப்புக்குள்ளாகும் 20 சதவீதம் பேரை பட்டியலுக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.,) நவ.4 முதல் டிச.3 வரை நடக்கிறது. தேர்தல் செயல்பாட்டில் போட்டோ வாக்காளர் அட்டை 2002 ல் நடைமுறைக்கு வந்தது. இப்பணியையும், ஓட்டு இயந்திரம் பயன்படுத்தியபோதும் 'நமக்கு ஒத்துவராது' என பல கட்சிகள் கூறின.
அப்போது எதிர்க்கவில்லை 2002 முதல் புதிய வாக்காளர் அட்டை, போட்டோவுடன் வாக்காளர் பட்டியல் நடைமுறைக்கு வந்தது. அப்போது இரட்டைப்பதிவு முறையும், இறந்தோர் நீக்கப்படாமலும், வீடுமாறியவர், தொகுதி மாறியவர் பெயர் அன்றைய நிலையில் அந்தந்த பட்டியலில் இடம்பெறாமலும் இருந்தன. இந்நிலையில் 2005 ல் தீவிர திருத்தப் பணியில் வி.ஏ.ஓ.,க்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இணைய வசதி இல்லாத நிலையில், கைப்பிரதிகளுடன் வீடுவீடாக திருத்தப்பணியைச் செய்தனர்.
அப்போது கட்சிகளிடம் மாற்றுக்கருத்து வரவில்லை. தற்போது 38 கலெக்டர்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட துணை கலெக்டர்கள், 317 தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார்கள் தனிக்கவனம் செலுத்தி நடத்துவதை, இயல்பான நடவடிக்கையாக கருதாமல் எதிர்க்கின்றன.
ஒரு ஆதாருக்கு ஒரு ஓட்டு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க முன்னாள் மாநில செயலாளர் சந்திரமோகன் கூறியதாவது: இப்பணியால் ஒரு ஆதாருக்கு ஒரு ஓட்டு உறுதி செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் 80 சதவீதம் பேர் முகவரி மாற்றமின்றி, தொடர்ந்து அதே முகவரியுடன் உள்ளனர். இவர்களுக்கு படிவம் கொடுத்து பெறுவதில் சிரமம் இருக்காது. எஞ்சிய 20 சதவீதம் பேர் வசிப்பிடம், தொகுதி மாறியவராக உள்ளனர். அரசியல் கட்சிகள், தேர்தல் ஆர்வலர்கள் இந்த 20 சதவீதம் பேரை இத்திட்டத்திற்குள் கொண்டு வர முயற்சிக்காமல், முட்டுக்கட்டை போடுவது ஆரோக்கியமானதல்ல.
எளிதான பணிதான் சிறு, பெரு நகரங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து குடியிருந்தவர்களுக்கு கதவு எண் இன்றி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி 25 ஆண்டுகளில் பல இடங்களில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வகை வாக்காளர்கள் தற்போது வசிக்கும் முகவரியில் புதிய வாக்காளர் அட்டை பெறுவதே சிறந்தது.
2002ல் பதிவு செய்த போட்டோ வாக்காளர் அட்டையில் இடம் பெற்றுள்ளது. அதை இன்றைய நிலைக்கு புதுப்பித்துக் கொள்வதும் சிறந்ததே. தேர்தல் ஆணைய படிவம் எளிய தமிழில் உள்ளது. எல்லா குடும்பத்திலும் படித்தவர்கள் உள்ள நிலையில் பூர்த்தி செய்வதிலும் சிரமம் இருக்காது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலரும் தினமும் 25 முதல் 30 குடும்பங்களை சந்திக்கும் நிலையில் 15 முதல் 20 நாட்களில் இப்பணிகளை முடித்து விடலாம். அரசியல் கட்சிகள் ஓட்டுச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்துள்ளன. இவர்கள் மூலம் இப்பணிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் விமர்சிப்பது திசை திருப்பும் நடவடிக்கை.
இவ்வாறு கூறினார்.

