UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:27 AM
பி ரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,) கதர் கிராமத் தொழில்கள் வாரியம் (கே.வி.ஐ.பி.,) மற்றும் மதுரை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் உற்பத்தித் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையும் சேவைத்தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை கடன் உதவி பெற கல்வித்தகுதி தேவையில்லை. அதற்கு மேல் திட்டமதிப்பீட்டில் தொழில் தொடங்க விரும்பினால் குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. உற்பத்தித் தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரையும் சேவைத்தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் கடன் பெறலாம்.
நகர்ப்புறத்தில் தொழில் துவங்கும் பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 15 சதவீத மானியம், கிராமப்புறத்தில் எனில் 25 சதவீதம் மானியம் உண்டு. மற்றவர்களான சிறப்புப் பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்க 25 சதவீதம், கிராமப்புறத்தில் தொழில் தொடங்க 35 சதவீத மானியம் உண்டு.
விண்ணப்பத்துடன் போட்டோ, பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஜி.எஸ்.டி., எண்ணுடன் கூடிய விலைப்புள்ளி விவரங்களை இணைக்க வேண்டும். வங்கியில் கடன் பெற அனுமதித்தபின் இணையதளம் வாயிலாக தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள கே.வி.ஐ.சி., கே.வி.ஐ.பி., அலுவலகங்கள், அழகர்கோவில் ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.
