
* கொலை வழக்கு நால்வரிடம் விசாரணை
மேலுார்: தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் விவேக் 26, நேற்று முன்தினம் நள்ளிரவு தர்மசானபட்டி செல்லும் வழியில் வயல் வெளியில் ஆடுகளின் பாதுகாப்புக்காக படுத்திருந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலுார் போலீசார் விசாரணையில் தீபாவளியன்று மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொலை நடந்தது தெரிய வந்தது. அவரது நண்பர்கள் நால்வரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
---
* கால்வாயில் ஆட்டோ டிரைவர் உடல்
திருப்பரங்குன்றம்: தென்கால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் மூலக்கரை பகுதி கால்வாயில் ஆண் பிணம் மிதந்தது. தீயணைப்பு. நிலையை அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் மீட்டனர். போலீசார் விசாரணையில், 'இறந்தவர் தென்பரங்குன்றம் வெங்கடேஷ் 40, ஆட்டோ டிரைவர் என்பதும், அதிக கடன் இருந்ததும், நேற்று முன்தினம் காலையில் மனைவியிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றதும்' தெரிந்தது. மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
* மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
வாடிப்பட்டி: பரவை பழனிக்குமார் 34, தனியார் தண்ணீர் நிறுவன டிரைவர். நேற்று தேனுார் ரோட்டில் உள்ள மார்பிள் நிறுவனத்திற்கு தண்ணீர் கேன்களை இறக்க சென்றார். நீர் ஏற்ற மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
---
* பெண் தற்கொலை
சோழவந்தான்: சங்கங்கோட்டை அஜித்குமார் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாண்டிச்செல்வி 24, இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். ஒரு மகள் மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவரின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று பாண்டிசெல்வி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
* போதை மாத்திரை: இளைஞர் கைது --------------- (படம் உண்டு)
உசிலம்பட்டி: பேரையூர் ரோட்டில் ஆன்லைன் பார்சல் சர்வீஸ் கடைக்கு உசிலம்பட்டி கீழச்செம்பட்டி மூவேந்திரன் 24 என்பவருக்கு மருந்து பொருட்கள் அடங்கிய பார்சல் வந்தது. சந்தேகமடைந்த பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூவேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வலிநிவாரணிக்காக பயன்படும் மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி உசிலம்பட்டி பகுதி இளைஞர்களுக்கு போதை மாத்திரையாக விற்பதாக தெரிவித்தார். அவரை கைது செய்து 300 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

