ADDED : ஆக 07, 2025 06:54 AM
பரோட்டா கடையில் தகராறு
மதுரை: சிந்தாமணி ரோட்டில் பரோட்டா கடை ஒன்றில் மாஸ்டராக இருப்பவர் ஆறுமுகம் 45. கடைக்கு வந்த சிந்தாமணி செல்வபிரகாஷ் 20, ஓம்முருகா நகர் முகமது அராபத் 18, கோகுலகண்ணன் 18, பானுசந்தர் 20 உட்பட 5 பேர், கிரேவி கேட்டு தகராறு செய்தனர். வாளி, கற்களால் தாக்கினர். 5 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
நுாதன திருட்டு
மதுரை: சுந்தரராஜபுரம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் 60. தனியாக வசிக்கிறார். இவரது வீட்டிற்கு வந்த திருச்சி உப்பூர் பஞ்சபூர் சதீஷ் 26, குடிக்க தண்ணீர் கேட்டார். சமையலறைக்கு மாரியம்மாள் சென்றதை பயன்படுத்தி டேபிளில் இருந்த ஏழரை பவுன் நகைகள், ஒரு அலைபேசி திருடிச்சென்றார். அவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.
லாரி மோதி வாலிபர் பலி
மதுரை: பழைய விளாங்குடி ராஜேஷ்குமார் 26. டூவீலரில் பாத்திமா கல்லுாரி பகுதியில் வந்தபோது லாரி மோதியது. இதில் தலையில் காயம்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் மாணவர் பலி
பேரையூர்: தேனி அல்லிநகரம் காளிதாஸ் 30. இவர் பாபநாசம் செல்வதற்காக உசிலம்பட்டியில் இருந்து பேரையூருக்கு காரில் வந்தார். பி.தொட்டியபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ஆதித்ய பிரவீன் 19, எதிரே டூவீலரில் வந்தார். இவர் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு மதுரையில் படித்து வந்தார். இவரது டூவீலரும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் ஆதித்யபிரவீன் தலையில் காயமடைந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி பெண் பலி
மேலுார்: கோமதியபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி 38. மாற்றுத்திறனாளி. கருத்து வேறுபாடால் கணவர் செல்வராஜை பிரிந்து மலம்பட்டியில் வசித்தார். அங்குள்ள தனியார் பேக்கரி ஊழியர் பொள்ளாச்சி திருமலைச்சாமியுடன் 45, பழக்கம் ஏற்படவே சேர்ந்து வாழ்ந்தனர். அவர்கள் 8 மாத நாய்க்குட்டி ஒன்றை வளர்த்தனர். நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து திருமலைச்சாமி வீட்டுக்கு வந்தபோது, இறந்து கிடந்த பாண்டிச் செல்வியின் முகத்தை வளர்ப்பு நாய் கடிப்பதை பார்த்தார்.
அந்த நாயை அடித்துக் கொலை செய்தார். பிறகு மதுபோதையில், இறந்து கிடந்த பாண்டிச் செல்வி அருகிலேயே படுத்து துாங்கினார். நேற்று காலை பக்கத்து வீட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., ஆனந்த ஜோதி, போலீசார் தினேஷ் குமார் விசாரித்தனர். இதில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு பாண்டிச்செல்வி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
ரயில் மோதி பெண் பலி
திருமங்கலம்: விருதுநகரில் இருந்து மதுரைக்கு சென்ற சரக்கு ரயிலுக்காக திருமங்கலம் பாண்டியன் நகர் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. காலை 11:15 மணிக்கு ரயில் வந்தபோது, அதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது ரயில் மோதியது. சம்பவ இடத்திலேயே பலியான அவரது உடல் 300 அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
இறந்தவரின் கையில் கே.டி.கே., ஜெயபால் என பச்சை குத்தப்பட்டிருந்தது. இறந்தவர் யார் என்பது குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்
அலங்காநல்லுார்: சத்திரப்பட்டி செல்வமாணிக்கம் 50. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் ஆக.,10ல் இல்ல விழா வைத்துள்ளார். அதற்கான பத்திரிக்கைகளை அலங்காநல்லுார் பகுதியில் நேற்று வழங்கினார். மாலை டூவீலரில் பெரியஊர்சேரியில் இருந்து வெள்ளையம்பட்டிக்கு சென்றார். ஆதனுார் காலனி அருகே போதையில் சிலர் செல்வமாணிக்கத்தை வழிமறித்து தாக்கினர். இதில் காயமடைந்தவர் அங்கிருந்து தப்பினார். போதை இளைஞர்கள் செல்வமாணிக்கத்தின் டூவீலரை பெட்ரோலை ஊற்றி எரித்தனர். அலங்காநல்லுார் போலீசார் அதேபகுதி ரவி மகன் வினோத்தை 26, கைது செய்தனர். தப்பிய பாரதிராஜா மகன் கலைஅமுதனை தேடி வருகின்றனர்.
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
வாடிப்பட்டி: சமயநல்லுார் பாப்பாத்தி அம்மன் கோயில் தெரு பந்தல் தொழிலாளி மலைமேகம் மகன் கருப்பு 8. ஊர்மெச்சிகுளம் நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி செல்லாமல் வீட்டுக்கு வந்த தாய் மாமன் முருகனுடன் 35, வைகை நகர் பகுதி ஆற்றில் குளித்தார். திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டி தலைமையில் மீட்புக் குழு வீரர்கள் 2 மணி நேரம் போராடி துவரிமான் நான்கு வழிச்சாலை பாலம் அருகே சிறுவன் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி பலி
மேலுார்: கீழையூர் விவசாயி குணசேகரன் 42. நேற்று மாலை மேலுாருக்கு டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. அம்மன் கோவில்பட்டி அருகே சென்ற போது பட்டுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் மோதி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
பேரையூர்: பேரையூர் தாலுகா அ.தொட்டியபட்டி திருமேனி 34. மாரிக்காளை 34. பெயின்டர்களான இருவரும் பெயின்ட் வாங்குவதற்காக டி.கல்லுப்பட்டிக்கு டூவீலரில் சென்று திரும்பியபோது டி.குன்னத்துார் அருகே குறுக்கே சைக்கிள் வந்ததால் பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் திருமேனி இறந்தார். மாரிக்காளை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
திருமங்கலம்: ஜவகர் நகரை சேர்ந்த சீனிவாச ரமணன் 36. பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறையில் வீட்டில் இருந்தார். ஆக., 2ல் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த அவர் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
அனுமதியின்றி பட்டாசு திரி
தயாரித்த 2 பேர் கைது
பேரையூர்: கள்ளிக்குடி தாலுகா உவரியில் உள்ள தனியார் தோட்டத்தில் அரசு அனுமதி இன்றி பட்டாசுக்கு திரி தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டிருந்த கள்ளிக்குடி எஸ். பி. நத்தம் பாண்டியராஜன் 34, விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம் .புதுப்பட்டி கருணாமூர்த்தி 19. ஆகிய இருவரை வில்லுார் போலீசார் கைது செய்து 3 கிலோ கரிமருந்து, 9 கிலோ வெடி மருந்துடன் கூடிய திரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி மணிகண்டனை தேடி வருகின்றனர்.