ADDED : மார் 24, 2025 05:24 AM

நாய்கள் கடித்து ஆடுகள் பலி
வாடிப்பட்டி: பாலன் நகர் ஜோதி 40, தனது வீட்டில் 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டின் அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கு பகுதியில் வசிக்கும் நாய்கள், வீட்டின் அருகே மேய்ந்த நான்கு ஆட்டுக்குட்டிகளை கடித்துக் கொன்றன. இரண்டு குட்டிகளை நாய்கள் கவ்விச் சென்றன. குப்பை கிடங்கில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளை சாப்பிட அப்பகுதியில் நாய்கள் கூட்டம் முகாமிட்டுள்ளன. இந்த நாய்களால் டூவீலரில் செல்வோர் விழுந்து விபத்து ஏற்படுகிறது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தீப்பிடித்த லாரி
வாடிப்பட்டி: நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு கிரஷர் துாசி ஏற்றிய லாரியை, அதே பகுதி டிரைவர் மகேஸ்வரன் 55, ஓட்டிச் சென்றார். நேற்று காலை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை குலசேகரன்கோட்டை பிரிவு அருகே வந்த போது லாரியின் டயரில் தீப்பிடித்தது. உடனே லாரியை நிறுத்திய டிரைவர் மகேஸ்வரன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் விரைந்து லாரியில் பற்றிய தீ பரவியது. வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் பலி
வாடிப்பட்டி: விராலிப்பட்டி கட்டட தொழிலாளி சிவா 32, பவித்ரா தம்பதி. இவர்களது மகன்கள் சிவசாய்குமார் 6, சிவகார்த்தி 4, நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சிவகார்த்தி 4, வீட்டின் முன் இருந்த இவர்களுக்கு சொந்தமான 5 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் விழுந்து மூழ்கியதில் இறந்தார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.