பாம்பு கடித்து பெண் பலி
திருமங்கலம்: கூடக்கோவிலைச் சேர்ந்த ராக்கம்மாள் 67, இவர் செப். 27 வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது காலில் பாம்பு கடித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரர் கைது
வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகர் முனியாண்டி 72, காளியம்மாள் 70, தம்பதியரின், இரு மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். இவர்களது மகன் செல்வகுமார் 38, திண்டுக்கல் மாவட்டம் பழநி 14வது பட்டாலியனில் போலீசாக உள்ளார். திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் செல்வகுமார், நேற்று சத்தியமூர்த்தி நகரில் தந்தை முனியாண்டியிடம் மது குடிக்க பணம் கேட்டார். தர மறுத்த முனியாண்டி, தடுத்த தாய் காளியம்மாளை தாக்கி காயப்படுத்தினார். சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,எஸ்.எஸ்.ஐ., உதயகுமார் செல்வகுமாரை கைது செய்தனர்.
சமையல் மாஸ்டர் பலி
கொட்டாம்பட்டி: குன்னங்குடி பட்டி கணேசன் 23, சமையல் மாஸ்டர். நேற்று முன்தினம் இரவு மணப்பட்டியில் அவர் வேலை பார்க்கும் உரிமையாளர் வீட்டில் ஆயுதபூஜை சுவாமி கும்பிட்டபின், நடந்து வீடு திரும்பினார். கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது திருச்சி நோக்கி சென்ற கார் மோதி கணேசன் இறந்தார்.
பட்டாசு தயாரித்தவர் காயம்
பேரையூர்: பி. சொக்கலிங்கபுரம் ராஜ்குமார் 34. கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். பண்ணை நடுவே தனியாக செட் அமைத்து அரசு அனுமதி இன்றி இயந்திரம் மூலம் வெடி பொருட்களை வைத்து கருந்திரி தயார் செய்துள்ளார். இவர் வெளியே சென்றிருந்தபோது, பாப்புரெட்டிபட்டி ராஜ்குமார் 26, இயந்திரம் மூலம் கருந்திரி தயார் செய்தார். திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு காயமடைந்தார். அந்த இடம் முழுவதும் சேதம் அடைந்தது. ராஜ்குமாரை கைது செய்த போலீசார், வெடி உப்பு 50 கிலோ, சல்பர் 5 கிலோ, கரி துாசி 40 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் மருதலட்சுமி, எஸ்.ஐ சின்னச்சாமி விசாரிக்கின்றனர். காயமடைந்த ராஜ்குமார் 26. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
--மொபைல் கடைகள் எரிந்து நாசம்
மதுரை: மீனாட்சி பஜாரில் நான்கு மொபைல் கடைகள் தீவிபத்தில் சேதமடைந்தன. இதில் கடைகளில் இருந்த அலைபேசிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பல எரிந்து நாசமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது. சேதமடைந்த கடைகளை அமைச்சர் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.