சிறுபான்மை ஓட்டுக்களை பெற நாடகம்: பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்
சிறுபான்மை ஓட்டுக்களை பெற நாடகம்: பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்
UPDATED : நவ 24, 2026 07:14 PM
ADDED : நவ 24, 2026 07:12 PM

திருப்பரங்குன்றம்: ‛‛தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், சிறுபான்மை ஓட்டுக்களை பெறுவதற்காக த.வெ.க.,வினர் நாடகம் ஆடுகின்றனர்,'' என, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமுற்றார்.
அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., வினரை கைது செய்தனர்; கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தான் கைது செய்யப்பட வேண்டியவர்கள் உள்ளனர்.
த.வெ.க., அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை. 1982 மண்டைக்காடு கலவரம் அரசின் தவறுகளால் நடந்தது.
அதைப்போல திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விஷயத்தில் த.வெ.க., அரசு தவறு செய்து விட்டது.
‛பரலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அரசு' என த.வெ.க., வினரே சட்டசபையில் கூறினர். இது பாமர மக்களால் கொண்டுவரப்பட்ட அரசு என நாங்கள் கூறுகிறோம். பரலோகத்தில் உள்ளவர்களுக்காக நியாயம் கொடுப்பதற்காக இந்த அரசு செயல்படும் என்றால், இது பரலோகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
தேர்தலுக்கு முன்பு அனைவருக்கும் சமமானவர் என முதல்வர் விஜய் கூறினார். ஆனால் அவர் தற்போது அப்படி இல்லை. விஜயின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செய்திருக்கக்கூடிய பல்வேறு தவறுகள், மதத்தின் அடிப்படையில் அவர்கள் செய்த தவறுகளை முதல்வர் விஜய் தடுத்திருக்க வேண்டும்.
தீப பிரச்னைக்காக கைது செய்யவதை தவிர்த்து விட்டு, தவறு செய்யும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்களைத் தான் கைது செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது தவறு. பா.ஜ., தலைவர்கள் தற்போது கைது செய்யப்படுவது தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவதற்கான நாடகம். இவர்கள் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். சிறுபான்மை ஓட்டுக்களை பெறுவதற்காக நாடகம் ஆடுகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணை சர்வே கல் என தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு 6 மாதங்கள் ஆகியும் யாரிடமாவது ஆலோசனை நடத்தியுள்ளனரா என்றார்.
