ADDED : ஜூன் 22, 2025 03:41 AM
உச்ச நீதிமன்றம் 'பொது கழிப்பறைகள் என்பது அடிப்படை மனித உரிமை' எனத் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள கழிப்பறைகள் பெண்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
பெண்கள் பொது கழிப்பறைகளை பயன்படுத்த தயங்குகிறார்கள். காரணம் கழிப்பறைகளின் சுத்தமின்மை, குறைந்த எண்ணிக்கை, தனியுரிமை இல்லாமை. இதனால் சிறுநீர் கழிப்பதை தாமதிப்பதோடு மட்டுமின்றி தண்ணீர் குடிக்கவும் தயங்குகிறார்கள். இது உடல்நலத்தில் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக சிறுநீர்ப்பை நிரம்பி மிகுந்த அழுத்தம் ஏற்படும். அருகில் உள்ள தசைகள், மூட்டுகள், எலும்புகள் மீது அழுத்தம் சேரும். சிறுநீர் தேங்கும் போது பெண்கள் சிலர் முன்னோக்கி குனிந்து தன்னியல்பாக உட்காருகிறார்கள், இது முதுகுத்தண்டின் இயல்பை பாதிக்கிறது. நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலையிலும் சிறுநீர் கழிப்பதை தள்ளிப் போடுவது பெல்விக் தசைகள் மீது எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது. கீழ் கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, முழங்காலில் வலி ஏற்படுகிறது.
நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் 2023 தரவுகள் படி, 55 சதவீத நகர்ப்புற பெண்கள் மட்டும் தான் பாதுகாப்பான மற்றும் சுத்தமான பொது கழிப்பறையைப் பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளனர். இது வாகனங்களில் பயணிக்கும் போது இச்சதவீதத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது. 38 சதவீதம் பேர் பயணத்திற்கு பின் இடுப்பு தசை வலி அல்லது சிறுநீர் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
சென்னை போன்ற நகரங்களில் 64.4 சதவீதம் இளம் வயது பெண்கள் சிறுநீர் கழிப்பதை தள்ளி போடுவது மற்றும் 1-3 மணி நேரம் தண்ணீர் அருந்துவதை தவிர்க்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. WHO மற்றும் UNICEF-ன் 2022 அறிக்கையின்படி, 40 சதவீத பெண்கள் தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதாகவும், அதனால் டிஹைட்ரேஷன் மற்றும் தசை தளர்ச்சி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
உடல் இயக்க பாதிப்பு
சிறுநீர் தாமதிப்பது இடுப்பை சுற்றியுள்ள பெல்விக் தளத்தை தாங்கி உள்ள தசைகள் தளர்வாகவே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. இது நாளடைவில் தசை தளர்ச்சி, முடக்கத்தை ஏற்படுத்தும். கர்ப்பம் தரிக்கும் காலங்களில் சிறு சிறு உடல் இயக்க சிக்கல்கள் தரும். அதிக நேரம் பொது போக்குவரத்து வசதிகளுக்காக காத்திருக்கும் போது பணி, சொந்த வேலை நிமித்தமாக நடந்து, படிகளில் ஏறி இறங்கி போன்ற இயக்கங்களின் போதும் சிறுநீர் பை நிரம்பி இருந்தால் இடுப்பு பகுதியில் இருந்து கீழ் நோக்கிய அழுத்தத்தை அதிகரிக்கும். இரண்டு கால்களின் தசைகளில் இருந்த இதயத்துக்கு திரும்பும் ரத்த ஓட்டத்தில் குறைபாடுகள் உருவாகும்.
உடல் எடை தாங்க உதவியாக உள்ள இடுப்பு பகுதியை ஒட்டியுள்ள தசைகளான குடேரட்டஸ் லம்போரம், இலியோசோஸ், பைரிபார்மிஸ் போன்ற முக்கிய தசைகள் இழந்த சமநிலையை ஈடு செய்ய கூடுதலாக வேலை செய்ய நேரிடும். இது நீண்ட எதிர்கால வலிக்கு வழிவகுக்கும். நரம்பியல் சிக்கல்களையும் துணைக்கு அழைக்கும்.
பொது கழிப்பறை சுத்தம் சமூகத்தையும் சார்ந்து உள்ளதையும் புறந்தள்ள முடியாது. பயன்படுத்தும் பொது மக்களும் சுத்தத்தை உறுதிபடுத்த வேண்டும். மகளிர் குழுக்கள், பள்ளி, கல்லுாரிகளில் இடுப்பு எலும்பு நலன் காக்கும் கலந்துரையாடல்களை பிசியோதெரபிஸ்ட்களை கொண்டு நடத்த வேண்டும். பொது கழிப்பறை ஒரு அடிப்படை உரிமை என்பதை காட்டிலும் சுகாதாரத்தில் ஒரு முக்கிய புள்ளி என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு இவற்றின் பயன்பாடு சீராக இருக்கும்போது மட்டுமே உடல்நலம், மனநலம் முழுமையாக பாதுகாக்கப்படும்.
- வெ.கிருஷ்ணகுமார்
தலைவர், இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம்தமிழ்நாடு கிளை