/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குவாரி முறைகேடு வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
/
குவாரி முறைகேடு வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : டிச 25, 2024 12:12 AM
மதுரை:மதுரை மாவட்டம் மேலுார் அருகே தும்பைப்பட்டியில் கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக 5 பேருக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தும்பைப்பட்டியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க பெரியசாமிக்கு தமிழக அரசு 2006ல் குத்தகை உரிமம் அனுமதித்தது. அருகிலுள்ள ஓடை புறம்போக்கு மற்றும் அனுமதியின்றி பட்டா நிலத்தில் குவாரி நடத்தி, 46.43 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக 2012ல் மேலுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மேலுார் நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அங்கு நிலுவையிலுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி பெரியசாமி, பாபு, அருண்ராஜா, மதன்குமார், கருணாநிதி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அரசு தரப்பு: அரசுக்கு சொந்தமான சொத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக குவாரி நடத்தி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளனர். மோசடி நடந்துள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் குற்றம் நடந்ததை போதிய அளவு வெளிப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை எதிர்கொள்ள ஏராளமான ஆவணங்கள் உள்ளன. அவர்கள் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த தந்திரங்களை கையாண்டுள்ளனர். வழக்கை இழுத்தடித்துள்ளனர். சட்டவிரோத குவாரிகள் குறித்து வலுவான கருத்துக்களை பதிவு செய்ய இந்நீதிமன்றம் கருதினாலும், அது குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதிக்கும் என்பதால், அதை தவிர்க்கிறது. இவ்வழக்கு விசாரணை கனிமவள வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

