/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விசாரணைக்கு வந்த சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர் காரில் அனுப்பினரா மதுரை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கேள்வி
/
விசாரணைக்கு வந்த சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர் காரில் அனுப்பினரா மதுரை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கேள்வி
விசாரணைக்கு வந்த சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர் காரில் அனுப்பினரா மதுரை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கேள்வி
விசாரணைக்கு வந்த சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர் காரில் அனுப்பினரா மதுரை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கேள்வி
ADDED : ஜூலை 03, 2025 03:30 AM

மதுரை: 'போக்சோ விசாரணைக்கு வந்த சிறுமியை குற்றம்சாட்டப்பட்டவர் காரிலேயே போலீசார் அனுப்பியதாக' கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட கண்காணிப்புக்குழுக் கூட்டம் குழுத்தலைவர் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், எம்.பி.,க்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், அய்யப்பன், மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த் பங்கேற்றனர்.
மாவட்ட வளர்ச்சிப் பணிகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசினர். உறுப்பினர் பொன்னம்மாள் பேசுகையில், ''ஜூன் 22ல் சமயநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் வழக்கு தொடர்பாக, 13 வயது சிறுமியை சீருடையுடன் அழைத்து இரவு 10:30 மணி வரை விசாரித்துள்ளனர். அதன்பின் குற்றம்சாட்டப்பட்டவர் காரிலேயே சிறுமியை அவரது வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்'' என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த எஸ்.பி., ''சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருந்ததால் எஸ்.ஐ., விசாரித்துள்ளார். போக்சோ வழக்குகளில் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். குற்றம் சாட்டியவர் காரில் சிறுமியை வீட்டுக்கு அனுப்பியது குறித்து விசாரிக்கிறேன்'' என்றார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு போதிய இடமில்லை. அதன் எதிரே உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தை பேரையூர் ரோட்டுக்கு மாற்றினால் அந்த இடம் கிடைக்கும். மல்லப்புரம் - மயிலாடும்பாறைக்கு மதுரை மாவட்ட பகுதியில் ரோடு அமைக்க வனத்துறைக்கு நிதி அளித்தால் அனுமதிக்க வேண்டும்' என்றார்.
அமைச்சர் மூர்த்தி, ''சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பல ஆயிரம் பேர் செல்கின்றனர். அதற்கான ரோடு, பாலம் கட்டப்பட்டுள்ளது. விளக்குகளை அமைப்பது எப்போது என்றார்.
அதிகாரிகள், 'ஆடி அமாவாசை நாட்களில் ஜெனரேட்டர் வைத்து மின்சப்ளை அளிக்கிறோம்' என்றனர்.
கலெக்டர் பேசுகையில், ''முன்னாள் படைவீரர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் ரூ.ஒரு கோடி நிதியுதவி திட்டம் போன்ற நல்ல அரசு திட்டங்கள் உள்ளன. அவற்றை மக்களிடம் சேர்ப்பதில் பொதுத்துறை வங்கிகளின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. கடனை பெற சிபில் ஸ்கோர், ஆவணங்கள் என பல தடைகளை கூறுகின்றனர். இதனை ரிசர்வ் வங்கி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்'' என்றார்.