/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் நனைந்த நெல் மூடைகள் கொள்முதல் மைய அவலம்
/
மழையால் நனைந்த நெல் மூடைகள் கொள்முதல் மைய அவலம்
ADDED : மார் 19, 2026 05:19 AM

உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியத்தில் அரசு நெல் கொள்முதல் மையங்களில் எடை போட்டு 25 நாட்களுக்கு மேலாகியும், வயல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்ததால் முளைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்களில் சாகுபடி செய்துள்ள நெல், அறுவடையின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட அரசு நெல்கொள்முதல் மையங்களில் கொள்முதல் நடந்து வருகிறது. திடியன், உச்சபட்டி, ஆரியபட்டி பகுதிகளில் கொள்முதல் செய்து, 40 கிலோ மூடைகள் வயல்வெளியிலேயே தேங்கியுள்ளன. அவை சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படாததால், 2 நாட்களாக மழையில் நனைகின்றன. மூடைகளை தார்ப்பாயால் மூடினாலும், அடியில் உள்ள மூடைகள் மழையில் நனைகின்றன. விரைவில் அவை முளைவிடத் துவங்கும்.
ஆரியபட்டி நல்லு கூறியதாவது: ஆரியபட்டியில் 10 ஆயிரம் நெல்மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். எடை போட்டு கொள்முதல் செய்தாலே விவசாயிகளின் பணத்துக்கு உத்தரவாதம் கிடைத்துவிடும். மழை வரும் நிலை உள்ளதால் மூடைகளை ஏற்றிச்செல்லுங்கள் என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டோம்.
நடவடிக்கை இல்லாததால் 25 நாட்களுக்கு மேலாகியும் இந்த மூடைகளை எடுத்துச்செல்ல லாரிகள் வரவில்லை. கடின உழைப்பினால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனையும் போது வருத்தம் ஏற்படுகிறது. அடுக்கிய மூடைகளில் அடிப்பகுதி மூடைகள் நனைந்துள்ளன. இப்படியே விட்டால் அவை முளைத்து பயனில்லாமல் போகும். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

