/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானாவாரியில் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் நெல்லுக்கு மாறிட்டாங்க; குறைந்தபட்ச விலை இல்லாததால் இந்த முடிவாம்

ADDED : மார் 04, 2024 05:48 AM

திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி நிலங்களில் இந்தாண்டு அதிகளவில் கோடை நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வழக்கமாக கோடை காலங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விடும். அதனால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்தாண்டு மழை தாமதமாக பெய்ததால் மானாவாரி பகுதி கண்மாய்களில் தண்ணீர் நிற்கிறது. இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.
சிவராமன், பாண்டி, தென்பழஞ்சி: தென்பழஞ்சி, வேடர் புளியங்குளம், சாக்கிபட்டி உள்பட பல்வேறு மானாவாரி பகுதிகளில் கடந்தாண்டு சம்பா நெல் அறுவடையை தொடர்ந்து கோடையில் பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகள் பயிரிட்டோம்.
காய்கறி பயிர்களை நடவு செய்வதற்கும், களை எடுப்பதற்கும், காய்களை பறிப்பதற்கும் என அதிக வேலையால், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. தவிர கூலி ஆட்களின் சம்பளமும் அதிகளவில் உயர்ந்து விட்டது. காய்கறிகளுக்கு அரசின் ஆதார விலை நிர்ணயம் இல்லாததால் பல சமயங்களில் கிலோவுக்கு ரூ. ஐந்து கூட கிடைக்காத நிலை ஏற்படும். அப்போது பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
ஆனால் நெல்லுக்கு அரசின் நிர்ணயித்த விலை இருப்பதால் நஷ்டத்தில் இருந்து தப்பிப்பதுடன் ஓரளவுக்கு லாபமும் ஈட்ட முடியும். மேலும் இயந்திரம் மூலம் நெல் நாற்றுக்களை நடவு செய்வதால் குறைந்தளவு விதை நெல், குறைந்த கூலியில் நடவு, அறுவடை முடியும் வரை இருமுறை மட்டுமே களை எடுப்பு, குறைந்த அளவு தண்ணீர், உரம் செலவாகும்.
அதனால் இந்தாண்டு சம்பா நெல் அறுவடையை முடித்து காய்கறிகளை தவிர்த்து விட்டு இயந்திரத்தின் மூலம் நெல் நடவு பணிகளில் இறங்கியுள்ளோம். காய்கறிகளுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்தால் தொடர்ந்து காய்கறிகளையும் பயிரிட தயாராக உள்ளோம் என்றனர்.