ADDED : டிச 04, 2025 07:06 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளின் மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சித்திரை வீதிகளில் கற்கள் பதிக்கும் பணியின் போது மழைநீர் வெளியேறும் வழிகளை அடைத்து விட்டனர். இதனால் நேற்று பெய்த மழையில், சித்திரை வீதிகளில் தண்ணீர் தேங்கியது. பக்தர்களின் 100 ஜோடி காலணிகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு மேற்கு - வடக்கு சித்திரை வீதி சந்திப்பில் குவிந்தன.
இதனால் மேற்கு சித்திரை வீதியில் ஒன்றரை அடிக்கு தண்ணீர் தேங்கியது. மின்கேபிளுடன் செல்லும் வடிகால் பகுதி நடைமேடையும் சேதம் அடைந்ததால் தண்ணீர் வெளியேற வழியின்றி மேற்கு கோபுரம் பகுதி சரிவுப் பாதை வழியே கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. நுாறுகால் மண்டபம் அருகே ஓரடிக்கு தண்ணீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

